மெக்சிகன் சிக்கன் ஊத்தப்பம்
தேவையானவை:
தோசை மாவு -அரை கிலோ
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்- ஒன்று
பொடியாக நறுக்கிய தக்காளி- ஒன்று
பொடியாய நறுக்கிய கேரட்- 2
சிக்கன் -200 கிராம்
இட்லிப் பொடி- 2 டேபிள்ஸ்பூன்
சீஸ்- 25 கிராம்
வெண்ணெய் – 25 கிராம்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். அடுப்பில், தோசைக்கல்லை வைத்து காய்ந்ததும், சிறிது வெண்ணெய் தடவி, தோசைமாவை ஊத்தப்பம் போன்று ஊற்றவும். இதன் மீது வெங்காயம், கேரட், தக்காளி, சிக்கன் துண்டுகளையும் வைக்கவும். பின் ஊத்தப்பத்தின் எல்லா இடங்களிலும் படுமாறு இட்லிப் பொடியைத் தூவவும். சுற்றிலும், வெண்ணெய் விட்டு வேகவிடவும். வெந்ததும் சீஸ் தூவி இறக்கிப் பரிமாறவும்.
இறால் தொக்கு தோசை
தேவையானவை:
தோசை மாவு – ஒரு கப்
இறால் -கால் கிலோ
சின்ன வெங்காயம் – 10
சீரகம் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
முட்டை – 2
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன், தேவையானவற்றில் கொடுத்துள்ள முட்டை, தோசைமாவு நீங்கலாக மற்ற அனைத்துப் பொருள்களையும் சேர்த்து வதக்கவும்.
இறுதியில், முட்டையை உடைத்து ஊற்றி இறக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், எண்ணெய் விட்டு், மெல்லிய தோசைகளாக வார்க்கவும். இதன் மீது ஏற்கெனவே செய்து வைத்துள்ள மசாலாக் கலவையை வைத்து சுற்றிலும் எண்ணெய் விடவும். பிறகு, தோசையை அப்படியே சப்பாத்தி போல் சுருட்டி எடுத்துப் பரிமாறவும்.
மட்டன் தோசை
தேவையானவை:
தோசை மாவு- அரை கிலோ
எலும்பில்லாத மட்டன் – கால் கிலோ
முட்டை – 5
இஞ்சிபூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
மட்டனை கழுவி சுத்தம் செய்து மீடியம் சைஸில் நறுக்கிக்கொள்ளவும். இத்துடன் உப்பு, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், தோசை மாவை ஊத்தப்பமாக ஊற்றவும். இதில் முட்டையை உடைத்து அடித்து ஊற்றி, வேகவைத்த மட்டன் தூண்டுகளை வைக்கவும். இதன் மேல் மிளகுத்தூள், சீரகத்தூள் தூவவும். பிறகு, எண்ணெய் ஊற்றி மூடிபோட்டு வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.
ஜவ்வரிசி கார தோசை
தேவையானவை:
இட்லி அரிசி – அரை கிலோ
உளுந்து – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 5
உப்பு – தேவையான அளவு
சோம்பு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2
பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு துண்டு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
ஜவ்வரிசியை 5 மணி நேரமும், அரிசி, உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியே ஊற வைத்துக்கொள்ளவும். ஊறவைத்தவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருள்களையும் இந்த மாவுடன் கலந்து சூடான தோசைக்கல்லில் ஊற்றி, எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேகவைத்துப் பரிமாறவும்.