புதுடெல்லி: மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போடும் நடவடிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் தமிழகம் உட்பட 7 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, தெலங்கானா, கர்நாடகா ஆகிய 7 மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து அந்த 7 மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: டெல்லி, தமிழகம், கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் தடுப்பூசிகள் செலுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், கரோனா பரவல் தடுக்கும் வகையில் பரவலாக தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் ராஜேஷ் பூஷண் கூறியுள்ளார்.
19,406 பேருக்கு தொற்று
நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 19,406 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நேற்று முன்தினம் கரோனா பாதிப்பு 20,551 ஆக இருந்த நிலையில் நேற்று அது சற்று குறைந்துள்ளது. நேற்று மட்டும் 19,406 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு 4 கோடியே 41 லட்சத்து 26 ஆயிரத்து 994 ஆக உயர்ந்தது. டெல்லியில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 ஆயிரத்தை தாண்டியது. நேற்று முன்தினம் மட்டும் 2,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் நேற்று மட்டும் கரோனா பாதிப்பில் இருந்து 19,928 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 65 ஆயிரத்து 552 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 1,34,793 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 571 குறைவு ஆகும். தொற்று பாதிப்பால் நேற்று 49 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,26,649 ஆக உயர்ந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.