SSLV-D1: செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை – இஸ்ரோ தகவல்!

விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விண்வெளித் துறையின் தேவையைக் கருத்தில் கொண்டு, 500 கிலோ வரையிலான எடையுடன் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக, சிறிய ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

அந்த வகையில், 120 டன் எடையுடன் தயாரிக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, இரண்டு செயற்கைக்கோள்களுடன் காலை 9.18 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

145 கிலோ எடைகொண்ட இஓஎஸ்-2 செயற்கைக்கோள் கடலோர நிலப் பயன்பாடு, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவியாக இருக்கும். இதற்காக 2 நவீனரக கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு 8 கிலோ எடை கொண்ட ஆசாதிசாட் என்ற கல்விசார் செயற்கைக்கோளைத் தயாரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் 75 கிராமப்புறப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளின் கூட்டு இணைப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விண்ணில் ஏவப்பட்ட செயற்கைகோள்களில் இருந்து இதுவரை சிக்னல் வரவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், “விண்ணுக்கு அனுப்பிய 2 செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் வரவில்லை. தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு உள்ளனர். 47 நிமிடங்கள் கடந்து விட்ட போதிலும் தற்போது வரை சிக்னல் வரவில்லை. சிக்னலை கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். தற்போது கிடைத்த தகவல்களில் இருந்து செயற்கைக்கோள்களின் நிலை குறித்து அறிய முயற்சி செய்து வருகிறோம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.