தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் அமைந்துள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில், திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் கடந்த 2021-ம் ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் அகழாய்வுப் பணிகள் நடத்திவருகின்றனர். இங்குள்ள பரம்புப் பகுதியில் மூன்று இடங்களில் ஆகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இதுவரை 80-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பினாலான பொருள்களும் கிடைத்துள்ளன. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 30 செ.மீ ஆழத்தில் தங்கத்தினால் செய்யப்பட்ட காதணி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 1902-ம் ஆண்டு அலெக்சாண்டர் இரியா இங்கு அகழாய்வு செய்தார். அந்தக் காலகட்டத்தில் தங்கத்தினால் ஆன நெற்றிப்பட்டயம் கிடைத்துள்ளது. அதன் பின்னரே இங்கு பல அகழாய்வுகள் நடந்தன.
கடந்த 2004 மற்றும் 2005-ம் ஆண்டில் இந்தியத் தொல்லியல்துறையின் சார்பில் முனைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடந்த அகழாய்வில் தங்கம் ஏதும் கிடைக்கவில்லை. கடந்த 2020-ல் தமிழகத் தொல்லியல் துறையின் சார்பில், அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் தலைமையில் நடந்த அகழாய்விலும் தங்கம் ஏதும் கிடைக்கவில்லை. தற்போது ‘சி’ சைட் பகுதியில் ஏற்கெனவே தோண்டப்பட்ட குழியில் உள்ள முதுமக்கள் தாழி ஒன்றில் தங்கத்தால் செய்யப்பட்ட 3.5 செ.மீ நீளம் கொண்ட ’நெற்றிப்பட்டயம்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதே தாழியில் வெண்கலத்தால் ஆன ’ஜாடி’ ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஜாடியில், சுற்றி அலங்காரமாக 5 இடங்களில் கொக்கு, வாத்து போன்ற பறவைகள் நீர் அருந்துவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் வெண்கலத்தால் ஆன 2 வடிகட்டியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அம்புகள், வாள், ஈட்டி, சூலம் உள்ளிட்ட இரும்பினாலான 20-க்கும் மேற்பட்ட பொருள்கள் உள்ளன. ஒரே முதுமக்கள் தாழிக்குள் இத்தனை பொருள்கள் கிடைத்துள்ளதால் தொல்லியல் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ், ”ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்துவரும் பணிகளில் ஆரம்பத்தில் இருந்தே ஏராளமான தொல்பொருள்கள் கிடைத்துவருகின்றன. அலெக்சாண்டர் இரியாவின் அகழாய்வுக்குப் பிறகு, அதாவது 120 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத்தினால் செய்யப்பட்ட காதில் அணியும் காதணி கிடைத்துள்ளது. இதனால், தமிழகத்தின் தொன்மையையும் அவர்கள் பயன்படுத்திய உலோகப் பயன்பாட்டினையும் அறிய முடிகிறது.

இந்த நிலையில், தற்போது தங்கத்தால் செய்யப்பட்ட நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழியில் புதைக்கப்பட்டவர் அந்தக் காலத்தில் மிகப்பெரிய தலைவராக இருந்திருப்பார். தற்போது கிடைத்துள்ள தங்க நெற்றிப்பட்டயம் ஆதிச்சநல்லூரில் விரைவில் அமைய உள்ள அருங்காட்சியகத்தை அலங்கரிக்கும் ஒரு பொருளாக இருக்கும்” என்றார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு சங்ககால வாழ்விடப்பகுதி மற்றும் சங்ககால நாணயங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.