வாஷிங்டன்:மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசு ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் பங்களாவில், எப்.பி.ஐ., எனப்படும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அமெரிக்காவின் 45வது அதிபராக இருந்தவர், பிரபல தொழிலதிபர் டொனால்டு டிரம்ப், 76. கடந்த, 2020 இறுதியில் நடந்த அதிபர் தேர்தலில், இவர் தோல்வியடைந்தார்.அமெரிக்க சட்டங்களின்படி, அதிபர் பதவியில் இருந்து வெளியேறுபவர், பதவிக் காலத்தின் போது கையெழுத்திட்ட கோப்புகள் உள்ளிட்டவற்றை, தேசிய ஆவணக் காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும்.கடந்த, 2021 ஜன.,ல், அதிபர் பதவியில் இருந்து வெளியேறிய டொனால்டு டிரம்ப், அனைத்து ஆவணங்களையும் முறைப்படி ஒப்படைக்கவில்லை.
இதையடுத்து, புளோரிடா மாகாணம், பாம் பீச்சில் உள்ள அவருடைய பங்களாவில், 15 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்களை, தேசிய ஆவணக் காப்பகம் பறிமுதல் செய்தது.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தும்படி, சட்ட அமைச்சகத்துக்கு தேசிய ஆவணக் காப்பகம் பரிந்துரை செய்திருந்தது. இதையடுத்து, மேலும் ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, டொனால்டு டிரம்பின் புளோரிடா பங்களாவில், எப்.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இது குறித்து, டொனால்டு டிரம்ப் கூறிஉள்ளதாவது:அமெரிக்காவுக்கு இது இருண்ட காலம். இதுவரை, எந்த ஒரு முன்னாள் அதிபருக்கும் இது போன்று நடந்ததில்லை. என்னுடைய பங்களாவுக்குள் நுழைந்து, அலமாரிகளை உடைத்து, எப்.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
ஏழை மற்றும் வளரும் நாடுகளில் மட்டுமே, இதுபோன்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் நடக்கும். வரும், 2024ல் நடக்க உள்ள அதிபர் தேர்தலில், நான் மீண்டும் போட்டியிடுவதை தடுக்கவே, இந்த சோதனை நடந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement