திரைப்பட பாடலாசிரியராகவும், கவிஞராகவும் இருந்து வருபவர் சினேகன். இவர் சினேகம் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை துவங்கி நடத்தி வருகின்றார்.
இத்தகைய நிலையில் இவர் சென்னை காவல் துறை ஆய்வாளர் அலுவலகத்தில் சமீபத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் பிரபல சின்னத்திரை நடிகை விஜயலட்சுமி தனது அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி பணம் மோசடி செய்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சினேகன் வைத்துள்ள இந்த குற்றச்சாட்டை நடிகை ஜெயலட்சுமி மறுத்து இருக்கிறார். இதுகுறித்து அவர் சென்னை காவல்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில், “நான் பாஜக மாநில மகளிர் அணி துணை தலைவியாக இருக்கிறேன். கடந்த 2018 முதல் சினேகம் அறக்கட்டளையை துவங்கி நடத்தி வருகிறேன்.
நான் அவரது கட்டளையை பயன்படுத்தி மோசடி செய்வதாக சினேகன் குற்றம்சாட்டியுள்ளார். இது ஒரு பொய் புகார்.” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஜெயலட்சுமி, “என் மீது அவதூறுகளை பரப்ப வேண்டும் என்று நோக்கத்துடன் சினேகன் செய்த செயல் இது. பொய்யான பரப்புரைகளை கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தி பிரபலமடைய வேண்டும் என்று சினேகன் செய்துள்ள காரியம். சினேகன் திமுகவிற்கு விலை போய் விட்டாரா என்று தெரியவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.