கரூர்: தனியாருக்கு ரயில்கள் தாரை வார்ப்பதாகக் கூறி, எஸ்ஆர்எம்யு (சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
‘பாரத் கவுரவ் என்ற பெயரில் 150 விரைவு ரயில்களையும், வந்தே பாரத் என்ற பெயரில் 200 அதிவிரைவு ரயில்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிடவேண்டும்’ என வலியுறுத்தி எஸ்ஆர்எம்யு (சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன்) சார்பில், ‘ரயில்வேயை காப்போம். தேசத்தை காப்போம்’ பிரச்சார இயக்கத்தில், இன்று (ஆக. 9) கரூர் கிளை செயலாளர் எம்.அன்பழகன் தலைமையில் கரூர் ரயில் நிலைய சந்திப்பு (ஜங்ஷன்) முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிளைத் தலைவர் முத்தையா முன்னிலை வகித்தார். உதவி செயலாளர் ராஜசேகர் வரவேற்றார். மற்றொரு உதவி செயலாளர் சுந்தர் நன்றி கூறினார். நிர்வாகிகள், சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், பணமாக்கல் என்ற பெயரால் ரயில் நிலையங்கள், மின் பாதை அமைப்புகள், கொங்கன் ரயில்வே, சரக்கு நிலையங்கள், உற்பத்தி பராமரிப்பு பணிமனைகள் உள்ளிட்ட பொதுமக்கள் சொத்துகளை விற்கக் கூடாது.
ரயில்வே தொழிலாளர்களின் நிரந்தர வேலைவாய்ப்பைப் பறித்து, குறுகிய கால ஒப்பந்த ஊழியர்களை புகுத்தக்கூடாது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.