கொச்சி: கேரளாவில் தாய், மகன் இருவரும் ஒரே நேரத்தில் அரசு பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த பெண் பிந்து என்பவர் 42 வயதில் அரசு அதிகாரியாக தேர்ச்சி ஆகியுள்ளார். இந்த வயதில் அரசு பணிக்கு தேர்ச்சி ஆகியுள்ளார் என்பது இந்த செய்தியின் சிறப்பு கிடையாது. பிந்து தேர்வாகியுள்ள அதே தேர்வில் அவரது 24 வயது மகனும் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது தான் இதில் சுவாரஸ்யமான விஷயம். பிஎஸ்சி எனப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கேரளாவில் அரசு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படும்.
பல்வேறு பணிகளுக்கு நடத்திய தேர்வின் முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில், பிந்து கிரேடு சர்வண்ட்ஸ் (எல்ஜிஎஸ்) தேர்வில் 92வது ரேங்க் எடுத்து தேர்ச்சி ஆகியுள்ளார். அதேநேரம் அவரின் மகன் விவேக், டிவிஷனல் கிளார்க் (எல்டிசி) தேர்வில் 38வது ரேங்குடன் தேர்ச்சி பெற்றுள்ளார். பிஎஸ்சி தேர்வுக்காக தாய், மகன் இருவரும் ஒன்றாகவே பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் சொல்லப்போனால், விவேக்கை அரசு பணிகளுக்கு தயாராக தாய் பிந்துவே உந்துசக்தியாக இருந்து பயிற்சி எடுக்க வைத்தாராம்.
இதற்கு முன்பு இருவரும் மூன்று முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி ஆகவில்லை. நான்காவது முயற்சியில் தான் இருவரும் ஒருசேர தேர்ச்சி ஆகியுள்ளனர். பிந்து அங்கன்வாடி ஆசிரியையாக பணிபுரிந்துள்ளார். இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டுள்ளார். அதேநேரம் விவேக் தினமும் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டுள்ளார்.
தாய், மகன் ஒரேநேரத்தில் அரசு பணிகளுக்கு தேர்வாகியுள்ள செய்தி வைரலாகி வருகிறது. இந்த வெற்றிக்குறித்து பேசிய விவேக், “அம்மாவும், நானும் ஒன்றாகவே பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டோம். அம்மாவே என்னை அரசு பணிகளுக்கு படிக்க ஊக்கப்படுத்தினார். இருவரும் ஒன்றாகப் படித்தோம், ஆனால் நாங்கள் ஒன்றாகத் தகுதி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை. நான் கோச்சிங் கிளாஸ்களுக்கு ரெகுலராகச் சென்றேன். அம்மா ஞாயிற்றுக்கிழமை வகுப்புகளுக்கு மட்டுமே வருவார். இதன் பலனாக இருவரும் தேர்ச்சி பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.