மயூர்பஞ்ச்: ஒடிசாவின் மயூர்பஞ்ச் பகுதியில் ஒரு மாற்றுத்திறனாளி ஒருவரை இரண்டு பேர் சித்திரவதை செய்யும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த காட்சிகளில் ஒரு நபர் தடியுடன் தோன்றுகிறார். அவர் ஒரு மாற்றுத்திறனாளியை மிரட்டி மற்றொருவரின் கால்களை வாயால் சுத்தம் செய்ய வற்புறுத்துகிறார். அவர் மறுக்க, பின்னர் தலைமுடியை பிடித்து அவர்களே அவரை சுத்தம் செய்ய வைக்கின்றனர். அப்படி சுத்தம் செய்த பின்னரே அந்த மாற்றுத்திறனாளியை விடுகின்றனர். இதன்பிறகு அந்த மாற்றுத்திறனாளியை தரையில் அமர்ந்து அழுகிறார். இடையில் இருவரும் அந்த மாற்றுத்திறனாளியை மிரட்டுகின்றனர். அவர்களுக்கு பின்னர் சிலர் அமைதியாக பயந்தபடி நிற்கின்றனர்.
இந்த வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறிதுநேரத்தில் இது ட்ரெண்ட் ஆக, கண்டனங்கள் குவிந்தன. மயூர்பஞ்ச் காவல்துறை இதில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தன. இதன்பின் நடந்த விசாரணையில் இது ஒரு போதைப்பொருள் ஒழிப்பு மையத்தில் நடந்த சம்பவம் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்துள்ள காவல்துறை அதிகாரிகள், மாற்றுத்திறனாளியை இழிவுபடுத்திய இருவரை தேடிவருகின்றனர். இதுதொடர்பாக மயூர்பஞ்ச் எஸ்பி பதிவிட்டுள்ள டுவீட்டில், “இது தொடர்பாக நாங்கள் முறையாக வழக்குப் பதிவு செய்துள்ளோம். மேலும் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம். இந்த போதை ஒழிப்பு மையங்களை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என்றுள்ளார்.