பெங்களூருவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், “பெங்களூர் நகரின் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் வணிகத் தொழில்ரீதியான சந்திப்புக்குத் தொழில் கூட்டாளி என்னை அழைத்தார். அதற்கு நான் மறுத்தும், பொது இடங்களில், தான் அசௌகரியமாக இருப்பதாகக் கூறி என்னை வரச்சொல்லி வற்புறுத்தினார்.
அதனால், கடந்த 6-ம் தேதி அவரைச் சந்திக்க அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குச் சென்றேன். அங்கு, எனக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்தார். நானும் அதைக் குடித்தேன். அதன்பிறகு என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதை உணர்ந்தேன். எனவே என்னை பாலியல் வன்கொடுமைசெய்த அந்த நபரைக் கைதுசெய்யவேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை, “சம்பவம் ஆகஸ்ட் 6-ம் தேதி நடந்தது. ஆனால், ஆகஸ்ட் 10-ம் தேதிதான் புகார் அளிக்கப்பட்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தற்போது அவர் தலைமறைவாக இருக்கிறார். குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க காவல்துறை தேடுதல் குழு தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள குற்றவாளிக்கு ரகசியத் தகவல் கிடைத்துத் தப்பிவிடலாம் எனக் கருதுவதால், இந்த வழக்கு குறித்த கூடுதல் தகவல்களை வெளியிட முடியாது. மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவித்திருக்கிறது.