ஆக.15 கிராம சபைக் கூட்டத்தின் விவாதப் பொருள்கள் என்னென்ன? – தமிழக அரசு விளக்கம்

சென்னை: ஆகஸ்ட் 15-ம் தேதியன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சிகளின் 2022-23 ஆம் ஆண்டிற்கான முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய – மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியா சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளான நிகழ்வை சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடிடும் இவ்வாண்டில், ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியினை ஏற்றி சுதந்திரத் திருநாள் அமுதப் பெரு விழாவினை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வில், இந்திய தேசியக் கொடியினைப் பயன்படுத்திடும் போது இந்திய தேசியக் கொடி வழிகாட்டுதலை (Flag Code of India) பின்பற்றிட வேண்டும்.

இந்த உன்னத சுதந்திர தினத் திருநாளில் சுதந்திரத்திற்காக உழைத்த நம் முன்னோர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து ஊராட்சி அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றப்படும். கிராம ஊராட்சிகளில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அனைத்து ஊராட்சித் தலைவர்களும் முறையே தத்தமது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக் கொடியினை ஏற்றிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆகஸ்ட்-15 அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கீழ்க்காணும் தலைப்புகளில் விவாதிக்கப்படும். கிராம சபைக் கூட்டங்களில் வரவு செலவு கணக்குகள் வெளியீடு, பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் பல்வேறு அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்கிற தலைப்புகளில் கூட்டப் பொருட்கள் உள்ளன.

ஊராட்சிகளின் 2022-23 ஆம் ஆண்டிற்கான முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, விவசாயம் மற்றும் உழவர் நலத்திட்டங்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உதவி எண் மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இவ்வாறு நடைபெறும் கிராம சபைக் கூட்ட விவாதங்கள், பயனாளிகள் தேர்வுகளில் ஈடுபடுதல் மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வது அவ்வூராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்துகொள்வது முக்கிய கடமையாகும்.

மேலும், கிராம சபைகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளும்போது உரிய கரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கிராம சபைக் கூட்டங்கள் காலை 11 மணி அளவில் நடைபெறும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.