உக்ரைன் அணுமின் நிலைய தாக்குதல்ஐ.நா., கூட்டத்தில் இந்தியா வருத்தம்| Dinamalar

நியூயார்க்:’உக்ரைனின் ஸாபோரிஸ்சியா அணுமின் நிலையம் அருகே ரஷ்ய படைகள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருவது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தகூடும் என்பதால் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பரஸ்பர கட்டுப்பாடுகள் தேவை’ என, இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் ஐந்து மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. உக்ரைனின் ஸாபோரிஸ்சியா அணுமின் நிலையம் அருகே ரஷ்ய படைகள் கடந்த சில நாட்களாக தொடர் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், அணுமின் நிலையத்தில் சேதம் ஏற்பட்டு உள்ளதாகவும், உடனடியாக ஆய்வுக்குழுவினரை அணுமின் நிலையத்திற்குள் அனுப்பி நிலைமையை சோதிக்க அனுமதிக்க வேண்டும் என, ஐ.நா.,வுக்கான அணுசக்தி கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் கூறியதாவது:உக்ரைனின் அணுசக்தி உலைகள் மற்றும் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அணு உலைகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அது மக்களின் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும்.அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படாத வகையில் பரஸ்பர கட்டுப் பாடுகள் விதிக்கப்படவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஐ.நா., பொது செயலர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது:போரில் தொடர்புடைய அனைவரும் பொது அறிவை பயன்படுத்த வேண்டும். அணு உலைகளுக்கு ஏற்படும் ஆபத்து, உலகின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு கேடு விளைவிப்பதோடு மக்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். எனவே, அணுமின் நிலையத்தை சுற்றிலும் நடக்கும் ராணுவ நடவடிக்கைகைள் உடனடியாக கைவிடப்பட வேண்டும். ஆயுதங்கள், வீரர்கள் திரும்ப பெறப்படவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.