பழைமை மாறாமல் புனரமைக்கப்படும் 250 ஆண்டுகள் பழைமையான ஹுமாயூன் மஹால்!

சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை எதிரே, எழிலக வளாகத்தில் பாரம்பர்யத்தையும், பழைமையையும் கம்பீரமாகத் தாங்கி நிற்கிறது `ஹுமாயூன் மஹால்’.

250 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்தக் கட்டடத்தை, பழமை மாறாமல் புனரமைக்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருக்கிறது.

ஹுமாயூன் மஹால்

தனிச் சிறப்பையும், பெரிய வரலாற்றையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஹுமாயூன் மஹாலைப் பார்த்தாக வேண்டுமென்ற ஆவல் மனதில் எழ…. வாகனத்தைச் செலுத்தினோம் ஹுமாயூன் மஹாலுக்கு..!

புனரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்க, பெருநகரத்தின் பேரிரைச்சலுக்கு நடுவில் நிசப்தத்தின் பேரமைதியை உணரமுடிந்தது. பறவைகளின் உரையாடல்களை கேட்டவாறே உள்ளே சென்றோம்.

ஹுமாயூன் மஹால்

13 பெரிய ஹால்கள், நான்கு வராண்டாக்கள், மேற்கூரையைத் தாங்கி வலுவாக நிற்கும் தேக்கு மரக்கட்டைகள், பெரிய ஜன்னல்கள் வழியாகச் சுதந்திரமாக நுழையும் தென்றல் நம்மை வெகுவாக ஈர்த்தது. விசாலமான அந்த ஹுமாயூன் மஹாலை சுற்றி பார்த்தபடியே அதன் வரலாற்றை அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தோம்.

நம்மை ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் பல தகவல்கள் கிடைத்தன. அதை அப்படியே இங்கு தொகுத்திருக்கிறோம்!

ஹுமாயூன் மஹால்

ஆற்காடு நாவப்களின் தங்குமிடம்:-

ஆற்காட்டைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் ஆற்காடு நாவப்கள்.1749-1795 வரை ஆண்ட மூன்றாம் முகலாய பேரரசர் ஆற்காடு நவாப் முகமது அலிகான் ராஜாவுக்காக ஆங்கிலேயக் கட்டட கலைஞர் பால்பென்ஃபீல்டின் நான்கு ஆண்டுக்கால உழைப்பில் அரண்மனையைப் போலவே பிரமாண்டமாக கட்டப்பட்டதுதான் இந்த `ஹீமாயுன் மகால்’. இந்த மஹாலின் மொத்த பரப்பளவு 76,567 சதுர அடி. முகலாய பேரரசர் ஹீமாயுன் நினைவாக இந்த மஹாலுக்கு அவர் பெயர் வைக்கப்பட்டதாம். ஆற்காடு நவாப் இங்குதான் தங்குவாராம்.

ஹுமாயூன் மஹால்

வெறும் தரை தளத்தோடு இருந்த இந்த மஹாலில், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டட கலைஞர் ராபர்ட் செஸ்ஸோம் தலைமையில் `இந்தோ சராசனிக் கட்டட கலை’-யில் முதல் தளம் அமைக்கப்பட்டது. இந்த மஹால் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணத்தின் வருவாய் வாரிய தலைமை அலுவலமாக இயங்கியிருக்கிறது.

தமிழ்நாட்டின் அரசு அலுவலகம்:-

சுதந்திரத்துக்குப் பிறகு எழிலகம் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதால், ஹீமாயுன் மஹாலில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை இயக்குநரகம், தோட்டக்கலை, போக்குவரத்து, வருவாய், கைரேகை ஆய்வியல் உள்ளிட்ட துறைகள் செயல்பட்டு வந்திருக்கின்றன.

ஹுமாயூன் மஹால்

மிகவும் பழைமையான கட்டடம் என்பதால் இந்த மஹாலில் சில பகுதிகள் சிதிலமடைந்து விழுந்தன. அதையடுத்து, இங்கு செயல்பட்டுவந்த அரசு அலுவலகங்களும் காலிசெய்யப்பட்டன. பின்னர், முறையாகப் பராமரிக்காததால் புதர் மண்டிப் போனது ஹுமாயூன் மஹால்.

கட்டடத்தின் பல பகுதிகள் சிதிலமடைந்து, இடிந்துவிழும் நிலையிலிருந்ததால் ஹுமாயூன் மஹாலை இடிக்க மாநில அரசு முடிவுசெய்தது. இந்தியாவின் முதல் ‘இந்தோ சராசனிக்’ கட்டடம் என்பதால் சமூக ஆர்வலர்கள் இடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதன் காரணமாக, இடிக்கும் முயற்சி கைவிடப்பட்டு… பழைமை மாறாமல் புனரமைப்பு செய்திட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு, 41.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.

ஹுமாயூன் மஹால் கட்டப்பட்டபோது பின்பற்றப்பட்ட அதே கட்டடக் கலை பாணியில் மீண்டும் புனரமைப்பு பணிகள் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக சாதாரணமான சுண்ணாம்பு பூச்சு இல்லாமல் பழைமை வாய்ந்த `தீர்வை பூச்சு’ முறையைப் பயன்படுத்துகிறார்கள். இந்த முறையின் சிறப்பம்சம் என்னவென்றால், தயாரிக்கப்படும் சுண்ணாம்பு கலவையுடன் கடுக்காய், வெல்லம், நாட்டுக் கோழி முட்டை, சோற்றுக்கற்றாழை ஆகியவை போட்டு சுமார் 15 நாள்கள் ஊறவைக்கப்படுமாம்.

ஹுமாயூன் மஹால்

பின்னர், அந்தக் கலவை பூச்சு வேலைக்குப் பயன்படுத்தப்படும் என்கிறார்கள். இது போன்று தயாரிக்கப்படும் சுண்ணாம்பு கலவை, 100 சதவிகிதம் தரமானதாகவும், உறுதியானதாகவும் இருக்குமாம்.

இந்த பூச்சு முறை, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முறையாக, அதுவும் ஹுமாயூன் மஹால் புனரமைப்பு பணிக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

31.08.2022-க்குள் அனைத்து பணிகளையும் முடிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.