சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் பிரசவத்தின் போது மருத்துவர்கள் அலட்சியத்தால் குழந்தையின் இடது தொடை பகுதி எலும்பு முறிவு, ஏற்பட்டதாக குழந்தையின் தந்தை புகார் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஆடுர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் பாரதிராஜா – அருள்மொழி தம்பதியினர். இந்நிலையில் அருள்மொழி நிறைமாக கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பிரசவ வலி ஏற்பட்டவுடன் குழந்தையை மருத்துவர்கள் அலட்சியத்தோடு வயிற்றில் இருந்து வலுக்கட்டாயமாக எடுத்ததாக கூறப்படுகிறது, இதனால் குழந்தையின் இடது தொடை பகுதியில் உள்ள எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்களிடம் பெற்றோர்கள் கேட்டபோது மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டதால் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்,
ஆனால், தொடர்ந்து மூன்று, நான்கு, நாட்கள் ஆகியும் தொடை பகுதியில் வீக்கம் அதிகரித்ததால் பயந்து போன பெற்றோர் குழந்தையின் காலை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்போது இடது கால் தொடை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது, இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவர்களை அணுகி கேட்டபோது குழந்தை அமர்ந்திருந்த நிலையில் இருந்ததால் இதுபோன்று எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கலாம் என அலட்சியமாக பதில் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இனிமேல் எந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கும் இதுபோன்று அலட்சியமாக பிரசவம் பார்க்க வேண்டாம். முடியவில்லை என்றால் மேல் சிகிச்சைக்கு மாற்று மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது எலும்பு முறிவு ஏற்பட்ட குழந்தையை சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..
மேலும் அலட்சியமாக செயல்பட்ட அரசு மருத்துவமணை மருத்துவர்கள் மீது சிதம்பரம் நகர காவல்துறையிடம் பாரதி ராஜா புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
