மன்னார் மாவட்டத்தில் கடந்த 11 தினங்களில் 103 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (12) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 11 தினங்களாக கொரோனா தொற்று மிகவும் அதிகமாக காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த வருடத்தில் மொத்தமாக 967 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,
இதுவரையில் மாவட்டத்தில் மொத்தமாக 40 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை 103 நோயளர்கள் கண்டறியப்பட்டாலும் இதை விட 7 அல்லது 8 மடங்கு நோயாளர்கள் சிகிச்சைக்கு வைத்தியசாலைக்கு வருகை தராமல் சுய சிகிச்சை பெற்றுக்கொண்டு வீடுகளில் தங்கி இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
இந்த தொற்றானது சாதாரண நிலையில் காணப்பட்டாலும் கூட ஒரு சமூகத்தில் மிகவும்,குறுகிய காலத்தில் பரவும் போது திரிபடையக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இவ்வாறு திரிபடைந்தால் வீரியம் கூடிய வைரஸ் ஒன்று இந்த சமூகத்தில் உறுவாகி பரவினால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் சந்தர்ப்பம் உள்ளது.
பொது மக்கள் இவ்வாறான சூழ்நிலையில் கட்டாயம் முக கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும்.
கூடிய அளவில் மக்கள் நடமாட்டம் அதிகரித்த இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
மாவட்டத்தில் இதுவரை 20 வயதிற்கு மேற்பட்ட 64 சதவீதமானவர்கள் பூஸ்டர் தடுப்பூசி, அல்லது 3 வது பைசல் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் உடனடியாக உங்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அல்லது பொது சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொண்டு தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்த வருடத்தில் இதுவரை 177 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் மன்னார் தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
தற்போது டெங்கு நுளம்பின் தாக்கம் குறைவடைந்திருந்தாலும், மழை காலம் ஆரம்பிக்கும் போது டெங்கு நுளம்பின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க சந்தர்ப்பம் உள்ளது.
எனவே பொது மக்கள் தமது சுற்றாடலை கட்டாயம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Logini Sakayaraja/ Press Conference