மத்தியப் பிரதேச மாநிலம், ஜபுவா மாவட்டத்தில் இருக்கும் ருபாரல் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன் கணவனை விட்டுவிட்டு முகேஷ் என்பவருடன் சென்று வாழ்ந்து வந்தார். திடீரென அந்தப் பெண் முகேஷை விட்டுவிட்டு மீண்டும் தன்னுடைய கணவரிடம்வந்து சேர்ந்துகொண்டார். இதனால் முகேஷ் கடும் கோபமடைந்தார். அதையடுத்து, நண்பர்களுடன் அந்தப் பெண் வசிக்கும் வீட்டுக்குச் சென்ற முகேஷ், அடித்து வலுக்கட்டாயமாக இழுத்து வெளியே கொண்டுவந்தார்.

பின்னர் தன்னை விட்டுப் பிரிந்து சென்றதால் அவரை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்தார். முகேஷும் அவர் நண்பர்களும் சேர்ந்து இரும்புக் கம்பியால் அந்தப் பெண்ணையும், அவரைக் காப்பாற்றவந்த அவர் கணவரையும் தாக்கினர். கிராமத்தினர் சிலர் அதனைத் தடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைத் தாக்கிய முகேஷ் உட்பட 4 பேரை கைதுசெய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.