பிரான்ஸ் நாட்டில் மழைப்பொழிவு குறைந்ததாலும், வெப்பநிலை அதிகரித்ததாலும் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதை அந்நாட்டு பிரதமர் எலிசபெத் போர்னே அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வறட்சியின் காரணமாக இதுவரை 3 முறை வெப்ப அலைகள் வீசியுள்ளது. 62 பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதே வெப்பநிலை தொடர்ந்தாலோ, இதைவிட அதிகரிகரித்தாலோ நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் அதிகளவில் ஆவியாகும். இதனால் பிரான்ஸ் கடுமையான வறட்சிக்கு உள்ளாகும் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பிரான்ஸில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக சூரியகாந்தி, மக்காச்சோளம் உள்ளிட்டவற்றின் உற்பத்தியும் குறைந்துள்ளது. இதனால், விவசாய பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பிரான்ஸில் விளையும் மக்காச்சோளம் உள்ளிட்ட பொருள்கள் ஐரோப்பாவின் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. ஏற்கனவே உக்ரைன்-ரஷ்யா போரால் ஐரோப்பா நாடுகள் விலைவாசி உயர்வினால் அதிகளவில் பாதிப்படைந்தன. இந்நிலையில் பிரான்ஸில் ஏற்பட்டுள்ள வறட்சி ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். பிரான்ஸ் வரலாற்றில் கடந்த ஜூலை மாதம் 9.7 மி.மீ மழைப்பொழிவே பதிவாகி உள்ளது. எனவே கடந்த ஜூலை மாதத்தை வறட்சி மாதம் என்றழைக்கப்படுகிறது. இதற்கு முன் 1961–ம் ஆண்டு மார்ச் மாதம் இதே அளவு வறட்சி ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் ஆற்று நீர்தான் அனல் மின் நிலையத்தில் உள்ள உலைகளை குளிர்விக்க பயன்படுகிறது. இதனால் அனல்மின் நிலையம் ஒன்று ஆற்று நீர் வெப்பநிலை அதிகமாக உள்ளதால் தன் செயல்பாட்டை நிறுத்தியது. ரோன் (RHONE RIVER) ஆற்றின் வெப்பநிலையும் இதேபோல் தொடர்ந்தால் கூடுதலாக ஒரு உலை தன் செயல்பாட்டை நிறுத்த வாய்ப்புள்ளது. பிரான்ஸ் நாட்டில் 70% மின்சாரம் என்பது அனல் மின் நிலையங்களை நம்பி இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் பிரான்ஸ் கடுமையான மின்சாரத்தட்டுப்பாட்டுக்கு ஆளாகும்.

பிரான்சில் ஏற்பட்ட வறட்சியை சமாளிக்க பேரிடர் குழு ஒன்று அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பேரிடர் குழு மூலமாக குழாய்களில் தண்ணீர் வராத பகுதிகளில் தண்ணீர் வண்டி மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு அதிகமுள்ள பகுதிகளில் குடிநீர், கால்நடைகளுக்கான தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகளுக்காக மட்டுமே தண்ணீர் பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கார்களை கழுவ தண்ணீர் பயன்படுத்துவற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீச்சல் குளங்களில் தண்ணீர் அதிகளவில் சேமிக்க பிரான்ஸ் அரசாங்கம் தடை விதித்துள்ளது.