புதுடெல்லி: பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று கூறியதாவது:
டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் எப்படி தலைவர் ஆனார்? ஆம் ஆத்மி எப்படி ஆட்சிக்கு வந்தது? இவை எல்லாமே குறுகிய கால பலன் அளிக்கும் இலவச அறிவிப்புகள் மூலம்தான். தூண்டில் புழு போல, அவர்கள் இலவசங்களை அறிவிக்கிறார்கள். உலகத்தின் மீது அக்கறை இருப்பது போல் கேஜ்ரிவால் நடிக்கிறார்.
பிரதமர் மோடியின் அணுகுமுறை எல்லாம் இலக்குகளுடன் கூடிய நலத்திட்டங்கள். ரூ.20 லட்சம் கல்வி கடன் விளம்பரத்துக்காக ரூ.19 கோடியை ஆம் ஆத்மி அரசு செலவு செய்துள்ளது. 2 மாணவர்களுக்கு மட்டுமே கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இந்த நடவடிக்கையில் அரவிந்த் கேஜ்ரிவால் ஈடுபடுகிறார்.
கரோனா தொற்றுக்கு இடையிலும் கடந்த 2018-19-ம் ஆண்டில் கார்ப்பரேட் வரியாக ரூ.6.63 லட்சம் கோடியும், 2021-22-ம் ஆண்டில் ரூ.7.1 லட்சம் கோடியும் மத்திய அரசு வசூலித்துள்ளது. இந்தப் பணம் எல்லாம் ஏழைகளுக்காகத்தான் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.