இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே.
கடந்த சில நாட்களாக சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்டி வரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், திரை உலக பிரபலங்களும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அந்த வகையில் இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களான ரத்தன் டாடா மற்றும் ஆனந்த் மஹிந்திரா ஆகியோர் தபால் நிலைய அதிகாரியிடம் இருந்து தேசியக்கொடியை பெற்றுள்ளனர். இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக வருகிறது.
75வது சுதந்திர தினம்
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து மத்திய அரசு இந்த ஆண்டு சுதந்திர தினத்தை கூடுதல் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன் சுதந்திர தின பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

20 கோடி தேசிய கொடி
இந்த பிரச்சாரத்தின் கீழ் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்றும் குறைந்தது 20 கோடி வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10 நாட்களில் 1 கோடி தேசிய கொடி
இதன் காரணமாக இந்த ஆண்டு தேசிய கொடிகள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தபால் நிலையங்களில் தேசியக் கொடியை வாங்கி செல்வதால் பத்தே நாட்களில் 1 கோடிக்கும் அதிகமான தேசியக்கொடியை விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாடாவிடம் தேசிய கொடி
மேலும் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை கூடுதலாக பிரபலப்படுத்தும் வகையில் தபால் நிலைய அதிகாரிகள் பிரபல தொழிலதிபர்களை நேரில் சந்தித்து மூவர்ண கொடியை அளித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான 84 வயது ரத்தன் டாடாவிடம் நேரில் சென்று மும்பை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சுவாதி பாண்டே தேசியக் கொடியை வழங்கினார். தொழிலதிபர் ரத்தன் டாடா அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தேசிய கொடியை பெற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவிடம் தேசிய கொடி
அதேபோல் 67 வயதான ஆனந்த் மகேந்திரா அவர்களும் மும்பை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சுவாதி பாண்டேவிடம் இருந்து தேசியக்கொடியை பெற்று கொண்டார். தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தேசியக்கொடியை பெற்றது குறித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தேசத்தின் இதயத்துடிப்பு
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “ஹர் கர் திரங்கா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மும்பை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஸ்வாதி பாண்டேவிடம் இருந்து மூவர்ண தேசிய கொடியை பெற்றது ஒரு மரியாதை. அஞ்சல் அமைப்பின் மூலம் கொடியை வழங்கியதற்கு நன்றி ஸ்வாதி. இந்த கொடி நம் தேசத்தின் இதயத்துடிப்பு!

இரு மடங்கு விற்பனை
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சுதந்திர தின பிரச்சார அறிவிப்புக்கு பின்னர் தேசிய கொடிகளின் விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ளதாக கொடிகள் விற்பனை செய்யும் வணிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் தேசபக்தி உணர்வை தூண்டுவதற்கு உதவியாக இருக்கும் என்றும் இந்திய தேசியக்கொடி பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்த உதவும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அஞ்சல் நிலையங்களில் தேசிய கொடி
இந்திய தேசிய கொடிகள் இந்த ஆண்டு கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டது என்பதும் அவை தனியார் நிறுவனங்கள் மூலம் மட்டுமின்றி அரசுக்கு சொந்தமான அஞ்சல் துறை மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு கோடி தேசிய கொடி
நாடு முழுவதிலும் உள்ள 1.50 லட்சம் அஞ்சல் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றும் குறுகிய நாட்களுக்குள் அதாவது 10 நாட்களுக்குள் தபால் நிலையங்கள் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமாக தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆன்லைன் மூலம் விற்பனை
மேலும் தபால் நிலையங்களில் ஆன்லைன் மூலமும் தொடர்பு கொண்டு தேசிய கொடிகள் விற்பனை செய்யப்படுகின்றன என்று அஞ்சல் அலுவலகத்தின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

சர்ச்சை
தேசியக்கொடிகளை ரேஷன் கடையில் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதாக எதிர்க்கட்சிகள் சில சர்ச்சைகளை கிளம்பினாலும் பெரும்பாலான குடிமக்கள் தேசிய கொடியை தேச பக்தியுடன் விருப்பத்துடன் வாங்கிச் செல்கின்றனர் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Independence Day: Ratan Tata, Anand Mahindra receive tricolour under ‘Har Ghar Tiranga’ campaign
Independence Day: Ratan Tata, Anand Mahindra receive tricolour under ‘Har Ghar Tiranga’ campaign | 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் ரத்தன் டாடா மற்றும் ஆனந்த் மஹிந்திரா!