அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை வெளியிடுக: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி துப்பக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு 3000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை 2022 மே மாதம் 18ந் தேதி தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. ஆனால், இதுவரையில் தமிழக அரசு அந்த அறிக்கையை வெளியிடவில்லை.

இந்நிலையில், நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணைக் குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக பல முக்கிய விசயங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. வெளிவந்துள்ள அந்தச் செய்திகள் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக சொல்லி வந்த ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாகவும், சட்டத்தை பின்பற்றாமலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும் காவல்துறையினர் வன்மத்தோடு பொதுமக்களை சுட்டுக் கொன்றுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

நீதி விசாரணையின் முழு அறிக்கையையும் ஆய்வு செய்த பிறகே அவ்வறிக்கை சம்பந்தமாக தெளிவான கருத்துகளை தெரிவிக்க முடியும் என்ற போதிலும், தற்போது அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக வந்துள்ள செய்திகள் ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டியவை உண்மை என்பதை உறுதி செய்துள்ளது. அதேசமயம், இச்சம்பவத்திற்கும், ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கும் எவ்வித சம்பந்தமில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக செய்திகள் உள்ளன.

இதுமட்டுமின்றி நாட்டையே உலுக்கிய இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான உத்தரவினை களத்தில் இருக்கக் கூடிய அதிகாரிகள் மட்டுமே செய்ய முடியுமா என்பதும், அரசின் உயர்மட்ட அதிகாரத்தில் இருந்தவர்கள் சம்பந்தமில்லாமல் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்க முடியுமா என்பன போன்ற கேள்விகளுக்கு விடையில்லாமல் உள்ளது. தமிழக அரசும் அந்த அறிக்கையை வெளியிடுவதற்கு தாமதப்படுத்துவதானது மேலும் மேலும் குழப்பங்களையும், பல்வேறு சந்தேகங்களையும் உருவாக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எனவே, இனியும் கால தாமதம் செய்யாமல் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக நீதியரசர் அருணா ஜெகதீசன் சமர்ப்பித்துள்ள முழு அறிக்கையினை உடனடியாக வெளியிட்டு, குற்றமிழைத்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.