காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

வேலூர்: ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை வைத்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று வேலூரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். வேலூர் சத்துவாச்சாரியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டியவர்கள் 3.50 கோடியாக உள்ளனர். இவர்களை இலக்காக வைத்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 27 லட்சம் தடுப்பூசி தமிழகத்தில் கையிருப்பில் உள்ளது. 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி கோர்போ வேக்ஸை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் போட்டுக் கொள்ளலாம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 4,308 மருத்துவ காலி பணியிடங்கள் அக்டோபர் இறுதிக்குள் நிரப்பப்படும்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள், கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டத்துக்கு புதிய மருத்துவக்கல்லூரி குறித்து அடுத்த வாரம் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் தக்காளி அம்மை இல்லை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‘தமிழகத்தில் குரங்கு அம்மை மற்றும் தக்காளி அம்மை நோய்களால் யாரும் பாதிக்கப்படவில்லை. கேரளா- தமிழக எல்லையில் 13 இடங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர பரிசோதனை  செய்யப்படுகிறது. தமிழகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை  கூட முழுவதுமாக பரிசோதனை செய்யப்படுகிறது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.