ஒன்றிய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதாவால் மாநில மின்வாரியங்களின் எதிர்காலம் கேள்விக்குறி

மன்னர் ஆட்சி என்பது ஒட்டுமொத்த அதிகாரங்கள் தனி நபரிடம் இருக்கும்.  அவர் வைப்பதே சட்டமாகும். அவர் எடுக்கும் முடிவை யாராலும் மாற்ற முடியாது.  மக்களாட்சி என்பது ஜனநாயக ஆட்சி. மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும்  ஆட்சி மக்களாட்சி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய அரசு,  மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் கடந்த சில காலங்களாக சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு உதவும் வகையிலான திட்டங்களை வகுத்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை  அவர்களுக்கு கூறுபோடுவது, அவர்கள் நடத்தும் தொழில்களுக்கு வரி சலுகை அளிப்பது, செல்போன் இணைய சேவை 5ஜி அலைக்கற்றையை சுமார் ரூ.3 லட்சம் கோடி  இழப்புடன் அவர்களுக்கு ஏலம் விடுவது, நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் அவர்களின் நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுப்பது, வர்த்தகம் செய்ய  அனுமதிப்பது, அவர்களுடைய நிறுவனங்களின் பொருட்களை வாங்க நிர்பந்திப்பது, ஒரு தொழிலதிபருக்காக பிரதமரே அண்டை நாட்டு அதிபரிடம் சிபாரிசு செய்வது என ஒன்றிய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

 தொழிலதிபர்கள் வாங்கிய ரூ.10 லட்சம் கோடி  கடனை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்யும் நிலையில், ‘மக்களுக்கு வழங்கும்  இலவசங்களால் எந்த வளர்ச்சியும் ஏற்படாது. ஓட்டுக்காக இலவசங்களை வழங்கும்  அரசியல் கட்சிகளின் கலாசாரம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மிக ஆபத்தானது’  என்று சமீபத்தில் பிரதமர் மோடி தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. டெல்லி முதல்வர் அரவிந்த்  கெஜ்ரிவால், ‘கல்வி, சுகாதாரத்தை மக்களுக்கு இலவசமாக வழங்குவது  அவசியமானது. ரூ.10 லட்சம் கோடி கடனை தொழிலதிபர்களுக்காக தள்ளுபடி செய்வது  ஏன்?. இலவசங்களை வழங்க கூடாது என்று ஒன்றிய அரசு சொல்ல முடியாது. இலவசங்களை  தொடர்ந்து வழங்குவோம்’ என தெரிவித்தார். இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில்  தொடரப்பட்ட வழக்கிலும், ‘இலவசங்களை வழங்க கூடாது என்று மாநில அரசுகளுக்கு  உத்தரவிட முடியாது’ என தெரிவித்தது.
 பெட்ரோல், டீசல் வரி, ஜிஎஸ்டி வரி என முக்கிய வருவாய் அனைத்தையும் மாநில அரசுகளிடம் இருந்து வாங்கி கொண்டு  ஒன்றிய அரசு பல்வேறு இலவச திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. மாநில அரசின் பணத்தின் மூலம் இலவசம் வழங்கிவிட்டு, சில மாநில அரசுகளை மோடி  விமர்சித்துள்ளார்.  மாநில அரசிடம் இருந்த உரிமைகளை பறிக்கும் வகையில் புதிய சட்டங்கள், தொலை  தொடர்பு, விமான போக்குவரத்து, காப்பீடு நிறுவனங்கள், வங்கிகள் என ஒவ்வொன்றையும்  தனியார் மயமாக்கி வரும் ஒன்றிய அரசு  தற்போது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் வயிற்றில் கை வைக்கும் வகையில் மின்சார  சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது.

இந்த மசோதா  நிறைவேற்றப்பட்டால் மின்துறை தனியார்களுக்கு கூறுபோடப்படும், வீடுகள்,  தொழில்துறை மற்றும்  விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும். இவ்வாறு ரத்தானால் விவசாயம் முற்றிலும் முடங்கி கடும் உணவு தட்டுப்பாடு  ஏற்படும். இதனால் உணவு பொருட்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய  வேண்டிய சூழல் ஏற்படும்.  இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், பல  தனியார் நிறுவனங்கள் மின்விநியோகத்தில் ஈடுபடும். காலப்போக்கில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாகி மாநில மின்வாரியம் கடனில் தள்ளப்பட்டு, ஒட்டுமொத்தமாக  தனியாரிடம் ஒப்படைக்கும் சூழல் ஏற்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நாடு, ஒரே வரி, ஒரே நாடு, ஒரே வங்கி என்பதுபோலே, ஒரே நாடு, ஒரே மின்வாரியம்  அல்லது ஒரே நாடு ஒரே மின் உரிமையாளர் என உருவாக்கும் பணியில்  ஒன்றிய அரசு இறங்கி உள்ளது. ஒன்றிய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான  பிஎஸ்என்எலை எப்படி நாசமாக்கினார்களோ, அதுபோல் மின்துறையும் காலியாகும் காலம்  வெகு தூரத்தில் இல்லை.

சர்ச்சையை ஏற்படுத்திய தடை
ஒன்றிய அரசின் மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் செயல்பட்டு வருகிறது. இதன்கீழ் செயல்படும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் (ஜென்கோஸ்) மூலம் மாநிலங்களில் உள்ள மின் வினியோக நிறுவனங்களுக்கு (டிஸ்காம்ஸ்) மின்சாரம் வழங்கப்படுகிறது. அதன்படி ‘டிஸ்காம்ஸ்’ சார்பில் மின்சார உற்பத்தி நிறுவனங்கங்களுக்கு (ஜென்கோஸ்) பணம் வழங்க வேண்டும். தற்போது பல மாநிலங்களில் உள்ள ‘டிஸ்காம்ஸ்’ சார்பில் மின்சாரத்துக்கு ரூ.5,000 கோடி பணம் நிலுவையில் உள்ளதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க ஒன்றிய அரசு தடை விதித்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி நிலையில் 6 மாநிலங்கள் பணம் செலுத்தியதாக ஆவணம் சமர்ப்பித்ததும் தடை நீக்கப்பட்டது. இதேபோல், தமிழகம் மின்சாரம் வழங்கும் நிறுவனங்களுக்கு நிலுவைத்தொகை முழுவதையும் பட்டுவாடா செய்துவிட்டது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் தமிழகத்துக்கான தடையை ஒன்றிய அரசு நீக்கியது.

அதானிக்காக வெளிநாட்டு
நிலக்கரி வாங்க கட்டாய உத்தரவு
மின்நிலையங்கள் பெரும்பாலும் நிலக்கரியில் இயங்குகிறது. இதற்காக நிலக்கரியை ஒன்றிய அரசு நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்திடம் இருந்து மாநில அரசுகள் வாங்குகிறது. இருப்பினும், 10% வெளிநாட்டு நிலக்கரியை பயன்படுத்துவது கட்டாயம் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வெளிநாட்டு நிலக்கரியை அதானி குழுமம் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது. இவர்கள் அதிக விலைக்கு விற்பதால், அந்த விலைக்கே வாங்க மாநில அரசுகள் தள்ளப்படுகின்றன. இதனால், மின்சார கொள்முதல் விலை உயர்வதோடு, வருவாய் கடுமையாக பாதிக்கிறது. இதன்படி, கடந்த 10 ஆண்டுகளில்  மூன்றில் 2 பங்கு மின்சாரம் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.

உதய் திட்டம் என்றால் என்ன?
உஜ்வல் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா என்பதே உதய் திட்டமாகும். மாநில மின் விநியோக நிறுவனங்கள்தான் டிஸ்காம். இந்த மின் விநியோக நிறுவனங்களின் நிலையை சீர்திருத்த வகை செய்யும் உதய் மின் திட்டத்தில் 21வது மாநிலமாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2017ம் ஆண்டு தமிழகம்
இணைந்தது.

* இத்திட்டத்தின் படி தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான டான்ஜெட்கோவின் விநியோகம் தொடர்பான கடனில் 25% கடன் ஒன்றிய அரசு ஏற்று கொள்ளும்.
* ஆண்டுக்கு ஒரு முறை மின் கட்டணம் உயர்வு
* மின்வாரியத்தின் கடனை மாநில அரசு ஏற்பதால், மின்வாரியத்திற்கும் மாநில அரசுக்கும் பல்வேறு திட்டங்களின்கீழ் ஒன்றிய அரசு ஊக்கத்தொகைகளை வழங்கும்.
* கூடுதல் நிலக்கரி ஒதுக்கீடு, ஒன்றிய மின் தொகுப்பிலிருந்து குறைந்த விலையில் மின்சாரம் போன்ற சலுகைகளும் வழங்கப்படும்.
* மின் இழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த திட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். அவர் இறந்த பின், பாஜவுடன் கூட்டணி வைத்து அதிமுக, இத்திட்டத்தில் இணைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. உதய் திட்டத்தில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணைந்தாலும் தொடர்ந்து இழப்பையே சந்தித்துள்ளது. இதுவரை ரூ.1.13 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளது.

கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள்
இலவச மின்சாரம் ரத்தானால் விவசாயம் முடங்கும். இதனால், விவசாயத்தை நம்பி உள்ளவர்களும், விவசாய கூலி தொழிலாளர்களும் லட்சக்கணக்கானோர் வேலையில்லாமல் சாப்பாட்டுக்கு திண்டாட வேண்டிய சூழல் ஏற்படும். இதேபோல், மின்துறை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் மின்துறையில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் என லட்சக்கணக்கான பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் 88,000 நேரடி தொழிலாளர்களும், ஒப்பந்த அடிப்படையில் 10,000 பேர் என 98,000 பேர் வேலையிழப்பார்கள். நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள். மின்சார சட்டத்திருத்த மசோதாவால் விவசாயம் மற்றும் மின்துறையில் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

ஆளே இல்லாமல் கணக்கெடுப்பு பணம் வசூல்
மின்வாரியம் சார்பில் பொருத்தப்படும் மீட்டர்களில் கணக்கெடுத்து அட்டையில் குறித்து கொடுக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுபோல், மின் கட்டணம் வசூலிக்கவும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, தமிழகத்தில் 12,000 பேர் வேலை செய்கின்றனர். தனியார் வந்தால் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு செய்தால், மின்கட்டணம் பில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வந்துவிடும். மக்களும், மின் கட்டணத்தை ஜி-பே போன்ற இணைய வழியாக கட்டலாம். இதனால், ஆளே இல்லாமல் இந்த பணிகளும் நடக்கும்.

2003ம் ஆண்டு ஒன்றியத்தில் வாஜ்பாய் தலைமையிலான பாஜ அரசு இருந்தபோது, புதிய மின்சார சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டப்படிதான் மாநில மின்வாரியங்கள் உற்பத்தி, விநியோகம் எனத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. ஒழுங்கு முறை ஆணையங்கள், மேல் முறையீட்டு தீர்ப்பாயங்கள் ஆகியவையும் உருவாக்கப்பட்டன. அனல் மின் நிலையங்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப, பொருளாதார அனுமதி தேவையில்லை என்று கொண்டு வரப்பட்டது.
* இச்சட்டப்படிதான், மாநில மின் வாரியங்கள் மின்சார உற்பத்தியிலிருந்து விலகியிருக்க வேண்டுமெனக் கூறப்பட்டது.
*  2007ம் ஆண்டிலிருந்து பெரும் மின் தட்டுப்பாட்டை இந்தியா எதிர்கொள்ள நேர்ந்தது. இதன் விளைவுகள் 2012-13ம் ஆண்டு வரை நீடித்தது.
* இந்த காலகட்டத்தில் பல தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்தியில் ஈடுபட முன்வந்தன. கிட்டத்தட்ட 40,000 மெகாவாட்டிற்கான மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டன.  உருவாக்கப்பட்ட மின் நிலையங்களை செயல்படுத்துவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன.
* 2003ம் ஆண்டின் மின்சாரச் சட்டம் வந்த பிறகு, தனியார் நிறுவனங்கள் மின் நிலையங்களைத் துவங்கின.
* இந்த காலத்தில் பெரும் மின் தடை இருந்ததால் பல மாநில அரசுகள் இந்த மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை வாங்க ஒப்பந்தங்களைச் செய்துகொண்டன. அப்போது, மின் உற்பத்தி நிறுவனங்கள் தாங்கள் விற்கும் மின்சாரத்திற்கு அதீதமான விலை நிர்ணயித்தன.
* 2003ம் ஆண்டின் மின்சாரச் சட்டத்திற்குப் பிறகு, இந்தியா முழுவதும் 34 அனல் மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கான கருவிகள் அனைத்தும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், இவற்றில் பெரும்பாலான அனல் மின் நிலையங்கள் செயல்பட முடியவில்லை.

ஊதிய உயர்வு பென்ஷன் ‘நோ’
தமிழகத்தில் தற்போது 90,000 ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் பென்ஷன் வாங்கி வருகின்றனர். மின்வாரியத்தின் வரவு, செலவில் 5.49% பென்ஷன் வழங்கப்படுகிறது. தனியார் வசம் சென்றால் ஓய்வூதிய பலன்கள் கிடைக்காது. இதேபோல், தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படும். தனியார் வசம் சென்றால், இதுவும் காலியாகிவிடும். இதேநிலைதான் நாடு முழுவதும் ஏற்படும்.

மாநிலங்களைமிரட்டும் ஒன்றிய அரசு
உதய் திட்டத்தில் மாநிலங்களில் பல சலுகைகள் வழங்கப்படுவதாக ஒன்றிய அரசு தெரிவித்தாலும், அவை அனைத்தும் முறையாக பின்பற்றவில்லை. நிலக்கரி மற்றும் மின்சாரம் ஒதுக்குவதில் மாநிலங்களுக்கு பராபட்சம் காட்டுகிறது. இழப்புகளில் சில ஆண்டுகள் பங்கெடுத்த ஒன்றிய அரசு அதன்பின் படிப்படியாக மானியங்கள், இழப்புகளில் பங்களிப்பு தருவதை
குறைத்தது. தற்போது மானியங்கள் வேண்டு மென்றால் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது. இவ்வாறு மின்கட்டணத்தை உயர்த்தும் மாநில அரசுகள் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படுகிறது.

புதிய மசோதாவால் ஏற்படும் பிரச்னைகள்
* மின்சார சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், விநியோகம் உரிமம் பெற்ற தனியார்கள் அனைவரும் ஒட்டுமொத்த அதிகாரத்தை பெற்று தனி காட்டு ராஜாவாக வலம் வருவார்கள்.
* டெல்லி, கொல்கத்தா, மும்பை போன்ற மாநிலங்களில் மின்விநியோகம் செய்ய  தனியாருக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், உற்பத்தி மற்றும்  கொள்முதல் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மசோதா நிறைவேற்றப்பட்டால் அவர்களே ராஜா, அவர்களே மந்திரி.
* பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தைக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படுவது போல், மின்கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் வழங்கப்படும். இதனால், மின் கட்டணம் கடுமையாக உயரும்.
* மின் துறையில் தனியார் பங்களிப்பு வந்தால், ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் தனித்தனி கேபிள் போட முடியாது. இதனால், ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் சார்த்திருக்கும். இதை தடுக்க மாநில மின்வாரியத்தின் மின்கட்டமைப்பை பயன்படுத்த தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* ஒருவேளை தனியார் நிறுவனங்கள் இடையே போட்டி ஏற்பட்டால், ஒரு நிறுவனத்தின் கேபிளில் இருந்து மற்றொரு நிறுவனத்தின் சார்பில் மின்விநியோகம் வழங்கப்படும். இதற்காக ஏற்படும் மொத்த செலவையும் உரிமையாளர்கள் தலையில் கட்டுவார்கள்.
* தனியார் வசம் சென்றால் நகரத்தில் உள்ளவர்கள், உடனுக்கு உடன் மின்கட்டணத்தை செலுத்த கூடியவர்கள், விலை உயர்வை தாங்க கூடியவர்கள் கட்டுவார்கள். விவசாயிகள், நெசவாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள் போன்றோர் மட்டுமே மாநில அரசிடம் மின்சாரத்தை வாங்குவார்கள்.
* தனியார் வசம் சென்றால் மின் கட்டணம், மின் விநியோகம் அதிகாரம் அவர்களுக்கு செல்லும். இதனால், மாநில அரசு அதிகாரம் பறிபோகும்.
* புதிய திட்டங்கள் போட மாட்டார்கள். மின் உற்பத்தி நிலையங்கள் முடங்கும். இறக்குமதி அதிகரிக்கும்.
* செல்போன் நிறுவனங்கள் போல் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மின் விநியோகம் செய்ய வழிவகுக்கும்.
* ஒரு மாநிலத்தில் உள்ள மின்கட்டமைப்பை பயன்படுத்தி அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அவர்கள் இஷ்டம் போல் வெளிமாநிலத்துக்கு விற்பனை செய்வார்கள்.
* மக்களுக்கு யூனிட்டாக கொடுக்கும் மானியத்தை ரத்து செய்துவிட்டு, அவரது வங்கி கணக்கில் அதற்கான பணத்தை செலுத்தலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட காஸ் மானியமே வங்கி கணக்கில் செலுத்ததால், இந்த மானியம் வங்கி கணக்கில் வருவது சந்தேகம்தான்.

தற்போதைய பிரச்னைகள்
* ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
* போதிய அணுகுமுறை இல்லாததால் ரூ.1.10 லட்சம் கோடி கடனில் பல மாநிலங்கள் தவிக்கின்றன.
* மின் விநியோக நிறுவனங்கள் கடனில் தவிப்பதால், அரசுக்கு அழுத்தம் தருகின்றன.
* நிறைய மாநிலங்களில் சரியான அளவு மற்றும் தரமான மின்சாரம் வழங்கப்படுவதில்லை.
* நகரம், கிராமம், தொழிற்சாலைகள், வீடுகள் என ஒவ்வொரு இடங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தில் பாகுபாடு காட்டுகிறது ஒன்றிய அரசு.
* உலகிலேயே மிகப்பெரிய மின்கட்டமைப்பை கொண்ட நாடாக இந்தியா இருந்தும் எந்த பயனுமில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.