மனிதாபிமானமில்லாத கண்டக்டர்; மூளைவளர்ச்சியற்ற மகனை ஒன்றரை கி.மீ., தூக்கி வந்து மனு அளித்த தந்தை

கிருஷ்ணகிரி: பஸ் கண்டக்டர் நடுவழியில் இறக்கிவிட்டதால் மூளை வளர்ச்சியற்ற, 16 வயது மகனை ஒன்றரை கி.மீ., தூரம் தூக்கி வந்து கலெக்டர் அலுவலகத்தில் சிறுவனின் தந்தை மனு அளித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி அடுத்த பேகேப்பள்ளியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வாணிஸ்ரீ, மற்றும் மூளைவளர்ச்சியற்ற, தன், 16 வயது மகன் ஹரிபிரசாத்துடன் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க கிருஷ்ணகிரிக்கு பஸ்சில் வந்துள்ளார். அப்போது அவரை பஸ் கண்டக்டர்‘ பஸ் கலெக்டர் அலுவலகம் வழியாக செல்லாது கீழே இறங்குங்கள்’ எனக்கூறி நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார்.

இதையடுத்து மூளைவளர்ச்சியற்ற தன், 16 வயது மாற்றுத்திறனாளி மகனை தூக்கமுடியாமல் ஒன்றரை கி.மீ., தூரம் தூக்கி வந்து கோபாலகிருஷ்ணன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அவர் கூறியதாவது: நான் குடும்பத்துடன் ஓசூரில் வசித்து வருகிறேன். எனது மகனுக்கு பிறப்பிலிருந்தே மூளை வளர்ச்சி கிடையாது. மாற்றுத்திறனாளியான அவனுக்கு வலிப்பு நோயும் உள்ளது. இந்நிலையில் என் மகனுக்கு மாற்றுத்திறனாளி நிதியுதவி மற்றும் பட்டா பிரச்னை தொடர்பாக கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க ஓசூரில் இருந்து தர்மபுரி செல்லும் அரசு பஸ்சில் (TN29 2720) ஏறினேன்.

அப்போது கண்டக்டரிடம் கலெக்டர் அலுவலகம் எனக்கூறி ஏறியபோதும் கிருஷ்ணகிரி நெருங்கியவுடன் கண்டக்டர்‘பஸ் கலெக்டர் அலுவலகம் வழியாக செல்லாது; மேம்பாலத்தில் ஏறி செல்வதால் நீங்கள் கீழே இறங்குங்கள்’ எனக்கூறி தரக்குறைவாக பேசினார். மாற்றுத்திறனாளி மகனை தூக்கி செல்வதில் சிரமம் இருக்கும் எனக்கூறியும் அவர் நடுவழியில் இறக்கி சென்றுவிட்டார். ஏற்கனவே, 3 வருட பட்டா பிரச்னை, மாற்றுத்திறனாளி மகனுடன் போராடும் எங்களை அரசு உட்பட யாரும் கண்டுகொள்ளவில்லை”.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.