எருமை மாடுகள் மீது ஆசிட் ஊற்றி கொடுமை| Dinamalar

இந்திய நிகழ்வுகள்

ஆசிரியரை ‘வெளுத்த’ கூடுதல் கலெக்டர்: பீஹாரில் நடந்த போராட்டத்தில் அதிர்ச்சி

பாட்னா-பீஹாரில், ஆசிரியர் பணி நியமன உத்தரவு வழங்காமல் இருப்பதை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தினர். இதில், தேசியக்கொடியுடன் சாலையில் படுத்து போராடியவரை, கூடுதல் கலெக்டர் தடியால் சரமாரியாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து, நேற்று ஏராளமானோர் தலைநகர் பாட்னாவில் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது ஒருவர், தேசியக்கொடியை ஏந்தி சாலையில் படுத்து போராடினார். இதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த கூடுதல் கலெக்டர் கே.கே.சிங், போலீசாரிடம் இருந்து லத்தியை வாங்கி, சாலையில் படுத்திருந்த ஆசிரியர் மீது சரமாரி தாக்குதல் நடத்தினார். இந்த ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இந்த சம்பவத்துக்கு, ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து, இது குறித்து விசாரிக்க பாட்னா கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

உ.பி.,யில்பாம்பு பிடி வீரர்பரிதாப பலி

ஷாஜஹான்பூர்-வீட்டுக்குள் புகுந்த பாம்பை லாவகமாக பிடித்தவர், அதை மற்றவர்களுக்கு காட்டியபோது அதே பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் வசித்த தேவேந்திர மிஸ்ரா பாம்பு பிடிப்பவர். சமீபத்தில் இந்த கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் பாம்பு புகுந்தது. தகவல் அறிந்து வந்த தேவேந்திர மிஸ்ரா, அதை லாவகமாக பிடித்தார். பின், அந்தப் பாம்பை தன் கழுத்தில் வைத்து கிராமத்து தெருக்களில் வலம் வந்தார். ஒரு சிறுவனின் கழுத்திலும் அந்தப் பாம்பை சுற்றி, கிராமமக்களுக்கு வேடிக்கை காட்டினார்.

இப்படியே இரண்டு மணி நேரம் வேடிக்கை காட்டிய நிலையில், எதிர்பாராத விதமாக பாம்பு மிஸ்ராவின் கையை கொத்தியது. வாயில் நுரை தள்ளியபடி விழுந்த மிஸ்ராவுக்கு, கிராம மக்கள் மூலிகை சாறு கொடுத்தனர். ஆனால், தேவேந்திர மிஸ்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.பாம்பை வைத்து மிஸ்ரா காட்டிய வேடிக்கைகளை சிலர் மொபைல் போனில் ‘வீடியோ’ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

தமிழக நிகழ்வுகள்

பத்திரப்பதிவு கூடுதல் ஐ.ஜி., மோசடி புகாரில் ‘சஸ்பெண்ட்’

சென்னை-மோசடி பத்திரங்களை பதிவு செய்ய துணை போனதாக, பதிவுத் துறை கூடுதல் ஐ.ஜி., கே.வி.ஸ்ரீநிவாசன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

latest tamil news

பதிவுத் துறையில் கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த மோசடிகள் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து வருகிறது. அதன் அடிப்படையில், பதிவுத் துறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சார் -பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு வந்தனர். இதில், தவறான வழிகாட்டுதல்கள், அறிவுரைகள் வழங்கி மோசடிக்கு துணையாக செயல்பட்ட, கூடுதல் ஐ.ஜி.,க்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற, கேள்வி எழுந்தது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்த பி.ஏ.சி.எல்., நிறுவனம் மோசடி புகாரில், 2016ல் முடக்கப்பட்டது. இந்த நிறுவன சொத்துக்களை நிர்வகிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி லோதா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.இக்கமிட்டியின் பெயரை தவறாக பயன்படுத்தி, தமிழகத்தில், 6,892 ஏக்கர் நிலங்கள் மோசடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக, 714 மோசடி பத்திரங்கள் பதிவு செய்ததாக, 63 சார் – பதிவாளர்கள் சிக்கினர்.இதில், ஒன்பது பேர் ஏற்கனவே தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், 54 பேர் மீதான புகார்கள் விசாரிக்கப்பட்டு வந்தது.

இதில் தவறான அறிவுரைகள் வழங்கி, மோசடிக்கு துணை போனதாக, கூடுதல் ஐ.ஜி., கே.வி. ஸ்ரீநிவாசன் மீது புகார் எழுந்தது. இது குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து வந்தது.காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில், புதிய விமான நிலையம் அமைய உள்ளது. பரந்துாரில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் நோக்கில், வழிகாட்டி மதிப்புகளுக்கு மாறாக, சில பத்திரங்கள் கூடுதல் மதிப்பை குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட சார் – பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.இதிலும் மோசடிக்கு ஆதரவாக செயல்பட்டதாக, கூடுதல் ஐ.ஜி., ஸ்ரீநிவாசன் மீது புகார் எழுந்தது. இந்த புகாரையும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்தது.இரு புகார்கள் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை அடிப்படையில், கூடுதல் ஐ.ஜி., கே.வி.ஸ்ரீநிவாசன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக, பதிவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் இம்மாத இறுதியில் ஓய்வு பெற இருந்தார்.

சென்னை ரவுடி மரக்காணத்தில் வெட்டிக் கொலை

மரக்காணம்-வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை சென்ற சென்னை ரவுடி, ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் அபிஷேக், 23; ரவுடி. இவர் மீது கொலை, வழிப்பறி, திருட்டு, அடிதடி உட்பட, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இவர், நேற்று முன்தினம் உறவினர்களுடன், வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை புறப்பட்டார். நேற்று காலை, 8.00 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கைப்பாணிகுப்பம், இ.சி.ஆரில் நடந்து வந்து கொண்டிருந்தார்.அப்போது, மூன்று பைக்குகளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், அபிஷேக்கை கத்தியால், சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.மரக்காணம் போலீசார், அபிஷேக்கை மீட்டு, புதுச்சேரி ‘ஜிப்மர்’ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து, முன் விரோதத்தால் அபிஷேக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலையாளிகளை பிடிக்க, தனிப்படை போலீசார் சென்னை விரைந்து உள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம், மரக்காணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணாடத்தில் மொபெட் திருட்டு

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே மொபட்டை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.பெண்ணாடம் அடுத்த முருகன்குடி, நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி, 45. விவசாயி. இவர் கடந்த 20ம்தேதி தனது பி.ஒய். 02 – எல். 8013 பதிவெண் கொண்ட மொபட்டை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு துாங்கச்சென்றார்.நள்ளிரவு 2:00 மணியளவில் எழுந்து பார்த்தபோது மொபட் காணவில்லை.ரகுபதி புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மப்பு டிரைவர், கண்டக்டர் ‛சஸ்பெண்ட்’

வந்தவாசி-வந்தவாசி அருகே, போதையில் அரசு பஸ் டிரைவர் மயங்கியதால், பயணியருடன் பஸ்சை கண்டக்டர் ஓட்டிச் சென்றார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் போக்குவரத்து பணிமனைக்கு உட்பட்ட, அரசு பஸ், புதுச்சேரியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக, திருப்பதி வரை இயக்கப்படுகிறது.

இதில், நேற்று முன்தினம், டிரைவர் தரனேந்திரன், கண்டக்டர் ஹோலிப்பேஸ் ஆகியோர் பணியில் இருந்தனர். காஞ்சிபுரத்திலிருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு பஸ் புறப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நோக்கி சென்றது.பயணியருக்கு கண்டக்டர் டிக்கெட் கொடுத்து விட்டு, அவரே பஸ்சை ஓட்டினார்.

பஸ் தடுமாற்றத்துடன் சென்றதால், பயணியர் பீதி அடைந்தனர்.நள்ளிரவு, 1:50 மணிக்கு வந்தவாசி வந்தவுடன், பஸ்சை நிறுத்தக்கூறி பயணியர் தகராறில் ஈடுபட்டனர்.அப்போது, டிரைவர் அதே பஸ்சில் ஒரு சீட்டில் போதையில் துாங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால், அந்த பஸ்சில் பயணம் செய்ய முடியாது எனக்கூறிய பயணியர், போராட்டத்தில் ஈடுபட்டனர்.வந்தவாசி தெற்கு போலீசார், பயணியரை சமரசம் செய்து, வேறு பஸ்சில் ஏற்றி அனுப்பினர்.இது குறித்து, திண்டிவனம் போக்குவரத்து பணிமனை மேலாளர் விசாரணை நடத்தி, பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகிய இருவரையும், ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டார்.

latest tamil news

மான் கறி விருந்து; இரண்டு பேருக்கு அபராதம்

தேவகோட்டை,–சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வெளிக்கொண்டானில் குப்புச்சாமி வீட்டிற்கு அருகே நாய் கடித்ததில் புள்ளிமான் இறந்து கிடந்தது. இதுகுறித்து போலீஸ், வனத்துறைக்கு தகவல் தராமல் குப்புச்சாமி மற்றும் கே.சிறுவனுார் வேலுச்சாமி மான்கறியை கூறுபோட்டு சமைத்து விருந்து சாப்பிட்டனர்.இது குறித்து கிராமத்தினர், வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். வனச்சரக அலுவலர் பார்த்திபன், வனவர்கள் கார்த்திகேயன், பிரவீன்பாரதி விசாரித்து மான்கறி சாப்பிட்டதை உறுதி செய்தனர். சாக்கு பையில் போட்டு மண்ணில் புதைத்து வைத்திருந்த மான் தோலையும் வனத்துறையினர் மீட்டனர். இருவருக்கும் ரூ.70 ஆயிரம் அபராதம் விதித்து நிபந்தனையின் பேரில் விடுவித்தனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 7 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிபுத்தூர்–விருதுநகர் மாவட்டம் சேத்துாரில் பள்ளி மாணவி க்கு பாலியல் தொல்லை கொடுத்த பொன்னுசாமி 65,க்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராஜபாளையம் தாலுகா சேத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் 2020 ஏப்ரல் மாதம், ஏழாம் வகுப்பு படித்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.ராஜபாளையம் மகளிர் போலீசார் பொன்னுச்சாமியை கைது செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடத்தினர்.இதில் பொன்னுச்சாமிக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிர்வாகம் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.

எருமை மாடுகள் மீது ஆசிட் ஊற்றி கொடுமை

மேட்டுப்பாளையம்;ஆசிட்டால் காயம் அடைந்த எருமைகளுக்கு, அரசு கால்நடை மருத்துவ குழுவினர், தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.மேட்டுப்பாளையம் கல்லாறு ரயில்வே கேட்டில், அகத்தியர் மடம் அருகே, ராஜ்குமார், நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவர், 40 எருமைகளை வளர்த்து, பால் கறந்து விற்பனை செய்து வருகிறார்.

latest tamil news

மேய்ச்சலுக்கு சென்று வந்த எருமைகள் மீது, யாரோ சிலர் ஆசிட் ஊற்றியுள்ளனர். இதனால், 25க்கும் மேற்பட்ட எருமைகளுக்கு புண் ஏற்பட்டு, காயம் அடைந்துள்ளன.இதுகுறித்து ராஜ்குமார் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். கோவை கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் பெருமாள்சாமி, உதவி இயக்குனர் டாக்டர் இளங்கோவன், மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவமனை டாக்டர் ராஜாங்கம் ஆகியோர் ராஜ்குமாரின், பண்ணைக்குச் சென்று, காயமடைந்த எருமைகளை பரிசோதனை செய்தனர். இதுகுறித்து மண்டல இணை இயக்குனர் பெருமாள்சாமி கூறுகையில்,”எருமைகள் மீது வீரியமிக்க கெமிக்கல் ஊற்றப்பட்டுள்ளது.

அதனால் புண் ஏற்பட்டுள்ள, இந்த எருமை மாடுகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க, டாக்டர் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரம் தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்,” என்றார்.இதை அடுத்து காரமடை கால்நடை டாக்டர் விமலா தேவி, இரும்பறை கால்நடை டாக்டர் வேடியப்பன், கால்நடை உதவியாளர் சுகுமார் ஆகியோர் காயமடைந்த எருமைகளுக்கு, மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.