புதுச்சேரி: காரைக்கால் – இலங்கை இடையே பயணிகள், சரக்கு கப்பல் போக்குவரத்து நடப்பாண்டு தொடங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். விடுதலைப் போராட்ட தியாகிகள் 260 பேருக்கு இலவச மனைபட்டா தரப்படும் என்றும் குறிப்பிட்டார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்: > இந்து சமய அறநிலையத் துறை, வக்பு வாரியம் நவீனமயமாக்கப்படும். அனைத்து கோயில்களின் தங்கம், வெள்ளி ஆபரணங்கள், கடவுள் உருவசிலைகள், அசையும் சொத்துக்கள் உட்பட அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் பராமரிக்கப்படும். கோயிலின் அனைத்து அசையா சொத்துக்கள் அனைத்தும் நில அளவை செய்து பாதுகாக்கப்படும். அனைத்து சொத்துக்களுக்கும் நியாயமான வாடகை தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
> விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற 260 தியாகிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்படும்.
> காரைக்கால் துறைமுகம் இலங்கையில் அமைந்துள்ள காங்கேசன் துறைமுகம் இடையே பயணிகள், சரக்கு கப்பல் போக்குவரத்து இந்த ஆண்டு தொடங்கப்படும்.
> சாகர்மாலா திட்டத்தின் கீழ் சென்னை துறைமுக கழகத்துடன் இணைந்து புதுவை துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் பணிகள் இந்த ஆண்டு முதல் செயல்பட தொடங்கும்.
> புதுவை துறைமுக மேம்பாட்டுக்காக பயணிகள், சரக்கு கப்பல் போக்குவரத்து மேற்கொள்ள ஆர்வமான நிறுவனங்களிடம் இருந்து விருப்பம் கோரப்பட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்த பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. புதுவை இந்திராகாந்தி பொது மருத்துவமனை, ராஜீவ்காந்தி மகளிர் மருத்துவமனையில் இ-மருத்துவ சேவை தொடங்கப்படும்.
> காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் புறநோயாளிகள் பதிவு, சிகிச்சை பிரிவு ரூ.55 கோடியில் கட்டப்படும். மேலும் காரைக்காலில் புதிய அரசு மருத்துவமனை ரூ.80 கோடியில் கட்டப்படும். அதோடு காரைக்காலில் புதிய மருத்துவக்கல்லுாரி கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
> போக்குவரத்து சேவையை ஊக்குவிக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 25 எலக்ட்ரிக் பேருந்துகள், 50 எலக்ட்ரிக் ஆட்டோக்கள் புதிதாக இயக்கப்படும். அரசு, தனியார் பஸ்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்கப்படும்.
> பாண்டி மெரினா கடற்கரையில் பாரதியார் சிலையுடன் தமிழ் பூங்கா, பொழுதுபோக்கு பூங்கா, பொழுதுபோக்கு மண்டலம் உருவாக்கப்படும். கைவினை கிராமத்தில் டிஜிட்டல் அருங்காட்சியகம், சுற்றுலா அனுபவ மையம், பொம்மை அருங்காட்சியம், இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் அமைக்கப் படும்.
> காரைக்காலில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்கள், வீராம்பட்டினம் கோவில் ஆகியவை மத்திய அரசு நிதியுதவி திட்டத்தின் கீழ் மேம் படுத்தப்படும்.
> மணப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கரில் மின்சாரம், சாலை அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தீம் பூங்கா, ஓய்வு விடுதி, மாநாட்டுக்கூடம், திரைப்படக்கூடம், சாகச விளையாட்டு போன்றவை தனியார் பங்களிப்புடன் செய்யப்படும்.