மலையாளத்துறை அசோசியேட் பேராசிரியையாக பிரியா வர்கீசின் நியமனத்துக்கு தடை கேரள ஐகோர்ட்டு உத்தரவு

பெரும்பாவூர்,

கண்ணூர் சர்வகலாசாலையில் அசோசியேட் பேராசிரியையாக நியமிக்கப்பட்ட பிரியா வர்கீசின் நியமன உத்தரவுக்கு கேரள ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டது.

கண்ணூர் சர்வகலாசாலையில் மலையாளத்துறையில் அசோசியேட் பேராசிரியையாக கண்ணூரை சேர்ந்த பிரியா வர்கீஸ் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனின் கூடுதல் செயலர் கே.கே.ராகேஷ் என்பவரின் மனைவி ஆவார். இவர் கண்ணுரைச் சேர்ந்தவர். பிரியா வர்கீஸ் நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இந்த தேர்வில் 2-ம் இடம் பிடித்த பேராசிரியர் ஜோசப் ஸ்கரியா என்பவர் தாக்கல் செய்த மனுவை கேரளா ஐகோர்ட்டு விசாரித்தது. அப்போது பிரியா வர்கீஸ் உட்பட 6 பேரை இந்த பதவிக்காக பரிசீலிக்கப்பட்டது தெரிய வந்தது.

இந்த பதவிக்கு பரிசீலிக்கப்பட்ட 6 பேரில் ஆய்வு தேர்வில் மிகவும் குறைந்த மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்த பிரியா வர்கீஸ் நேர்முகத் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பெற்றார்.

முதலில் ஆய்வு தேர்வில் 651 மதிப்பெண் பெற்ற ஜோசப் ஸ்கரியா நேர்முகத் தேர்வில் 30 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தைப் பிடித்தார். இந்த நிலையில் நேர்முகத் தேர்வில் பிரியா வர்கிசுக்கு கூடுதல் மதிப்பெண் தரப்பட்டதாகக்கூறி, வேண்டுமென்றே தன்னை புறக்கணித்ததாக கூறி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு தனி அமர்வு நீதிபதி சியாஉல் ரஹ்மான், பிரியா வர்கீசின் நியமன உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தார்.

அத்துடன் கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் ஏற்கனவே அரசியல் அழுத்தம் காரணமாக கட்சி சார்புடைய நபர்களுக்கு இடம் அளிக்கும் விதத்தில் இந்த தேர்வு நடைபெற்றதாக கூறி பிரியா வர்கீசின் நியமனத்தை அங்கீகரிக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.