புதுடெல்லி: நாடு முழுவதும் ஒன்றிய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான கியூட் நழைவு தேர்வு ஆறு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டது. தொழில்நுட்ப மற்றும் நிர்வாக குளறுபடிகள் காரணமாக பல மாநிலங்களில் சில மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டன. மறுதேர்வுகளுக்காக மாணவர்கள் புதிய அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்த மாணவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் அனுமதி அட்டையில் கடந்துவிட்ட தேர்வு தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கும்படி கோரிக்ைக விடுத்துள்ளனர்.
தேசிய தேர்வு முகமை மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவை அவர்கள் அணுகி தேர்வில் பங்கேற்பதற்கு வாய்ப்பு வழங்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜகதீஷ் குமார் கூறுகையில், ‘‘மாணவர்கள் இந்த சிக்கல் தொடர்பாக விண்ணப்ப எண்ணுடன் தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுத வேண்டும். இதனை சரிபார்த்த பின்னர் மறுதேர்வு எழுத அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார்.