கேக்கில் விஷம் கலந்து கொடுத்து மனைவி, 2 குழந்தைகள் கொலை: தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை

திருமலை: மனைவி, 2 குழந்தைகளுக்கு கேக்கில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டு தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூர்யபிரகாஷ். ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இதற்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஐதராபாத்திற்கு மனைவி அக்‌ஷயா(36), மகள் பிரதியுஷா(13), மகன் அத்வைத்(10) ஆகியோருடன் குடிபெயர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் சங்கரம்பேட்டா அருகே பங்குதாரர்கள் சிலரை சேர்த்துக்கொண்டு நிலம் வாங்கி லேஅவுட் அமைத்து ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் சூர்யபிரகாஷ் மனவேதனையில் இருந்துள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் பங்குதாரர்களும் பணம் கேட்டு தொடர்ந்து சூர்யபிரகாஷ், மனைவி அட்சயா, மகள் மற்றும் மகனை அடித்து, மிரட்டியுள்ளனர். தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சூர்யபிரகாஷ், மனைவி, குழந்தைகளுடன் கடந்த 4ம்தேதி நிஜாமாபாத் வந்து அங்குள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று காலை அறையை சுத்தம் செய்ய ஊழியர்கள் கதவை தட்டினர். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை. இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் ஐதராபாத் 4வது டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வந்து அறையை திறந்து பார்த்தனர். அறையில் சூர்யபிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

படுக்கையில் அவரது மனைவி அக்‌ஷயா, மகள் பிரதியுஷா, மகன் அத்வைத் ஆகியோர் சடலமாக கிடந்தனர். பக்கத்தில் பாதி சாப்பிட்ட கேக் இருந்தது. மனைவி, மகள், மகன் ஆகியோருக்கு சூரியபிரகாஷ் கேக்கில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் மனைவியின் துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

ஓட்டல் அறையில் சூர்யபிரகாஷ் எழுதியதாக கூறப்படும் ஒரு  கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ரியல் எஸ்டேட் பங்குதாரர்கள் சிலர், தன்னை துன்புறுத்தியதாக கூறி அவர்கள் பெயர்களை எழுதியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.