நாகர்கோவில்: தமிழக அரசின் ெபாங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2 ஆயிரத்தை வாங்கிவிட்டு பொக்கை வாய் சிரிப்பை உதிர்த்த நாகர்கோவில், புத்தேரி, கீழ கலுங்கடியை சேர்ந்த வேலம்மாள் பாட்டியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று முதல்வரும் அந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்த பாட்டி தனக்கு சொந்தமாக வீடு இல்லை என்று அப்போது குறைபட்டிருந்தார். குமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை வேலம்மாள் பாட்டி சந்தித்து பேசியிருந்தார்.
இந்தநிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க வேலம்மாள் பாட்டிக்கு தமிழக அரசு சார்பில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட வீட்டிற்கு டெபாசிட் தொகை ரூ.76,000-த்திற்கான காசோலையை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த்திடம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் பூதலிங்கம் பிள்ளை வழங்கினார். அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள பால்குளம் என்ற இடத்தில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வேலம்மாள் பாட்டிக்கு இலவச வீடு ஒதுக்கப்பட்டது. இதற்கான உத்தரவு நகலை நாகர்கோவில் ஆர்.டி.ஒ சேதுராமலிங்கம், வேலம்மாள் பாட்டியிடம் நேரில் வழங்கினார்.
நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற வேலம்மாள் பாட்டி, முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். தனக்கு வீடு கிடைக்க நிதியுதவி அளித்தவர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்.