அகமதாபாத்: 2030ம் ஆண்டுக்குள் அகமதாபாத் நகரின் வெப்பநிலை கணிசமாக உயரும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் அடுத்து வரும் ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை குறித்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அதிக மக்கள் தொகை கொண்ட இந்த நகரத்தில், 2030ம் ஆண்டு சராசரியாக 0.81 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
வெப்பம் அதிகரித்து வருவதால் மின்தேவையும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வெப்பத்தின் தாக்கத்தை தவிர்ப்பதற்காக மக்கள் ஏசி, மின்விசிறி, குளிர்சாதன பொருட்களை பயன்படுத்துவது அதிகரிக்கும். இதனால், மின்தேவையும் உயரும். ஆய்வாளர்களின் கருத்துப்படி, வருடாந்திர மின்தேவை 8001 ஜிகாவாட்டில் இருந்து 14,744 ஜிகாவாட்டாக உயரும். குளிரூட்டுவதற்கான மின் தேவையானது தற்போதுள்ள 1,460 ஜிகாவாட்டில் இருந்து 4050 ஜிகாவாட்டாக உயரக்கூடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான மின்உற்பத்தி நிலையங்கள் நிலக்கரியில் இயங்குவதால் அதிக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படவும் இது வழிவகுக்கும்.
இந்த வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க, வீட்டின் மேற்கூரையில் வெள்ளை வண்ணம் பூசுதல், வெள்ளை மொசைக்கற்கள் பதித்தல் போன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும்.
புயல்களை போல் வெயிலுக்கும் பெயர்
புயல்களை போல் வெப்ப அலைக்கும் விஞ்ஞானிகள் பெயர் வைக்க தொடங்கி உள்ளனர். முதல் முறையாக, ஸ்பெயின் விஞ்ஞானிகள் வெப்ப அலைக்கு ‘ஜோ’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்தாண்டு ஜூலை முதல் ஸ்பெயின் முழுவதும் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகின்றது. அதிகபட்சமாக 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது.