விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தக்குமார் முன்னிலை வகித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக, அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, மண்டல வாரியான ஆய்வுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இன்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்,

“விலையில்லா மிதிவண்டிகளை உள்ளாட்சி பிரதிநிதிகளை வைத்து வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 70 லட்சத்தை கடந்துள்ளது. இதனை மேலும் அதிகப்படுத்த வேண்டும். 10 மற்றும் 12-ம் வகுப்புகளின் தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகளில் இடிக்கப்பட்ட வகுப்பறைகளை புதிதாக கட்டுவதற்கு மொத்தம் 7,000 கோடி ரூபாயை 5 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்படவுள்ளது. இதில் இந்த ஆண்டு மட்டும் 1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10,031 இடிக்கப்பட்ட வகுப்பறை கட்டடங்கள் புதுப்பிக்கப்படவுள்ளன. 2,500 பள்ளிகள் மரத்தடியில் செயல்படுகின்றன. இப்பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர்களின் நிதிகளை கொண்டு வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அரசு திட்டங்களான ‘இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், எண்ணும் எழுத்தும்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முறையாக பள்ளிகளில் செயல்படுத்தபடுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டு, கண்காணிக்க வேண்டும். பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை பள்ளிகளில் சேர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இடைநிற்றல் இல்லா மாநிலமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்க, தன்னம்பிக்கையை வளர்ப்பதற்காக 800 மருத்துவர்கள் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பள்ளிகளில் தன்னம்பிக்கை வளர்க்கக்கூடிய உரைகளை சிறந்த பேச்சாளர்களை கொண்டு, மாணவர்களிடையே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான கற்றல் இருக்க வேண்டும் என்பதற்காக நாட்டிலேயே முதன்முறையாக ரூ.9.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த சுமார் 6,000-க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பற்றிய பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நமது கல்வித்துறையில் 413 ஒன்றியங்கள் உள்ளன. 800 மருத்துவர்கள் வருடத்திற்கு ஒரு முறை மாணவர்களை பரிசோதனை செய்ய செல்வதற்கு பதிலாக 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் விதமாக, வாரம் ஒருமுறை நூலகத்திற்குச் சென்று அவர்கள் வாசிக்கும் புத்தகத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்களில் மாநில அளவில் 250 பேர் தேர்வு செய்யப்பட்டு வெளிநாட்டுப் பயணம் அழைத்துச் செல்லும் திட்டமும் இருக்கிறது. மாணவர்கள் தன்னம்பிக்கையை இழந்து விடக்கூடாது” என்றார்.