கேரள மாநிலம் திருச்சூரில் காட்டுயானை ஒன்று செப்டிக் டேங்கில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கேரளா மாநிலம் திருச்சூரிலுள்ள வெள்ளிகுளங்கரை பகுதியில் வில்லுக்குன்று காப்பு வனப்பகுதியை ஓட்டியுள்ள விவசாய நிலத்தில் பயன்பாட்டில் இல்லாத செப்டிக் டேங்க் இருந்துள்ளது. அந்த பகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானை ஒன்று அதில் தவறி விழுந்துள்ளது. தலை மற்றும் முன்பகுதி செப்டிக் டேங்கில் மாட்டிக்கொண்டதால் மூச்சு விடமுடியாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இது குறித்து இடத்தின் உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் யானையை வெளியே எடுத்தனர். பின்னர் உடற்கூறு பரிசோதனைக்குப் அனுப்பி வைக்கப்பட்டதற்கு பின் யானையின் உடல் குழிதோண்டி புதைக்கப்பட்டது.
மேலும், கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் காட்டு யானை கூட்டம் ஒன்று சுற்றி திரிவதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் செப்டிக் டேங்கில் விழுந்த யானை, அந்த யானை கூட்டத்திலுள்ள ஒரு யானையாக இருக்கலாம் என சந்தேகிக்கித்து அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் வனத்துறையினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
