கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் விற்பனை போன்ற சமுதாய சீர்கேடுகளைத் தவிர்த்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என, தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் கொலைக்களமாக மாறி வருவதாகவும், இதனால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கை தாமே நேரடியாக கவனித்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் கூறியதை எடப்பாடி பழனிசாமி நினைவுக்கூர்ந்துள்ளார்.
இதுதான் சட்டம் ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா? எனக் கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, இந்த படுகொலைச் சம்பங்களுக்கு காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
