தமிழகத்தின் உயிர்க்கொல்லி சாலை.. ஒரே நாளில் 8 உயிர்களை காவு வாங்கிய பயங்கரம்..! வாகன ஓட்டிகளே உஷார்..!

சேலம் – உளுந்தூர் பேட்டை நான்குவழி சாலையில் இரு வழிச் சாலையாக மாறும் இடத்தில்  ஆத்தூர் அருகே லாரியை முந்திச்செல்ல முயன்ற ஆம்னி கார் மீது எதிரே வந்த தனியார் பேருந்து பயங்கரமாக மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஒரே நாளில் 8 உயிர்களை காவு வாங்கிய உயிர்க்கொல்லி சாலையின் விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு…

சேலத்தில் இருந்து உளுந்தூர் பேட்டை வரை செல்லும் சாலையானது ஊர் வரும் பகுதியில் பைபாஸில் இரு வழி சாலையாகவும், அதற்கு பிறகு நான்குவழி சாலையாகவும் ஆபத்தான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய நெடுஞ்சாலை சென்னையில் இருந்து கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட போக்குவரத்திற்கான பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலை நான்குவழிசாலையும் இரு வழி சாலையும் மாறி மாறி வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

நான்குவழி சாலை என்று இந்த சாலைக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் இடையில் மாறி மாறி வரும் இரு வழிச்சாலை பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் தங்களுக்கு முன்னாள் மெதுவாக செல்லும் சரக்குவாகனங்களை முந்திச்செல்ல முயலும் போது அதிகம் விபத்தில் சிக்கியதால் அதனை தடுப்பதற்காக இருவழிச்சாலையின் நடுவில் பிளாஸ்டிக் குச்சிகளை நட்டுவைத்து கடமையை முடித்துக்கொண்டனர். ஆனால் இதற்கு பிறகுதான் வாகன விபத்துக்கள் குறைவதற்கு பதில் அதிகரித்து வருகின்றது.

அதிக பாரத்துடன் மெதுவாக ஊர்ந்து செல்லும் வாகனங்களுக்கு பின்னால் வால்பிடித்துச்சென்று பொறுமை இழக்கும் வாகன ஓட்டிகள், முன்னாள் செல்லும் சரக்கு வாகனத்தை எளிதில் முந்திச்செல்ல இயலாத வாறு இடையூறாக சாலையில் நடுவில் பிளாஸ்டிக் குச்சியை நட்டு வைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் கிடைக்கின்ற இடைவெளியில் சரக்கு வாகனத்தை முந்திச்செல்லும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவதால், எதிரில் வரும் வாகனத்தில் மோதி இந்த கோர விபத்துக்களும் உயிர்பலிகளும் அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில் திருச்செங்கோட்டை சேர்ந்த ராஜேஷ் என்பவர் , தனது உறவினர் ஆறுமுகம் என்பவரின் 30 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தனது ஆம்னி காரில் ஆத்தூர் வந்துள்ளார்.

நள்ளிரவு 12 மணிக்கு மேல் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த தனது உறவுக்கார பெண்களை தனது காரில் அழைத்துச்சென்று தேனீர் வாங்கிக் கொடுத்த அவர், அனைவரையும் ஒரு ரவுண்டு போய் வரலாம் என்று ஆத்தூர், ஒட்டம்பாறை பைபாஸ் சாலைக்கு சென்றுள்ளார். காரில் ஒரு சிறுமி, 9 பெண்கள் மற்றும் ராஜேஷ் உடன் சேர்த்து மொத்தம் 11 பேர் இருந்துள்ளனர்.

மலர் பள்ளிக்கூட பாலம் அருகே தங்களுக்கு முன்னாள் மெதுவாக சென்ற லாரி ஒன்றை முந்திச்செல்ல ராஜேஷ் ஆம்னிகாரை வேகப்படுத்தி உள்ளார்.

காரில் 11 பேர் இருந்ததாலும் , இரு வழிச்சாலையாக இருந்ததால் எதிரே வாகனங்கள் வந்து கொண்டு இருந்ததாலும், அந்த லாரியை உடனடியாக முந்த இயலவில்லை.

ஒரு கட்டத்தில் தனது காரின் வேகத்தை அதிகப்படுத்தி முந்திச்சென்ற போது எதிரே வந்த தனியார் பேருந்து , ஆம்னிகார் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆம்னிகார் உடைந்து நொறுங்கி சின்னாபின்னமானது.

காரில் பயணித்த ராஜேஷ் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர், ஒரு சிறுமி சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார், மற்றவர்கள் சிகிச்சைக்காக ஆத்தூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதே போல இதே இரு வழி சாலையின் ஓரம் பழுதாகி நின்ற சரக்கு வாகனத்தின் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் இருவர் பலியாயினர். ஒரே நாளில் 8 உயிர்களை காவு வாங்கி விபரீத சாலையாக மாறி உள்ளது இந்த வினோத இருவழிச்சாலை..!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.