தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணமாக திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். முதல் வேலையாக நேற்று இரவு ஸ்டாலின் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
இன்று அவர் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகியின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள கோவைக்கு வந்துள்ளார்.
அவருக்கு அதிமுகவினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஆறுகுட்டி சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இந்த அதிர்ச்சி மறையாத சூழலில் கொங்கு மண்டலத்தில் அதிமுகவை எப்படி பலப்படுத்துவது? கட்சியில் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த பிரச்சினைகளுக்கு காரணம் என்ன? அதை எப்படி தீர்ப்பது? என்பது குறித்து தனியார் மண்டபத்தில் எடப்பாடிபழனிசாமி கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இப்படி எதிர்க்கட்சித் தலைவரும், முதல்வரும் ஒரே பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருப்பது தற்போது கோவை மாவட்ட அரசியல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.