5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததிலிருந்தே, கட்சியின் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடவேண்டுமென்று, காங்கிரஸுக்குள்ளேயே பல்வேறு பேச்சுக்கள் எழுந்தன. இந்த நிலையில், காங்கிரஸில் தற்போது தலைவர் பதவிக்கான தேர்தல் வேலைகள் நடைபெற்றுவருகிறது. இருப்பினும், தலைவர் பதவிக்கு யார் யார் போட்டியிடப்போகிறார்கள் என்பது குறித்த அறிவிப்புகள் ஏதும் வெளிவரவில்லை.

இருந்தும், காங்கிரஸின் மூத்த தலைவர் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ராகுல் காந்தியே மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறிவந்தார்.இதற்கிடையில், தலைவர் பதவிக்கான தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடப்போகிறார் என செய்திகள் வெளியாக, “எனக்கென்று ஒதுக்கப்பட்ட என்னுடைய கடமைகளை மட்டுமே நான் செய்துவருகிறேன். அதுபற்றி எனக்கெதுவும் தெரியாது” என அசோக் கெலாட் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் டெல்லியில் இன்று தனியார் ஊடகத்திடம் பேசிய அசோக் கெலாட், “தற்போது, எனக்கு இரண்டு வேலைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸின் மேற்பார்வையாளர் மற்றொன்று ராஜஸ்தான் முதல்வர். அதில் என்னுடைய வேலையை நேர்மையுடனும், முழு உறுதியுடனும் நான் செய்து வருகிறேன். மேலும், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியே மீண்டும் பொறுப்பேற்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அதில் அவர் கட்டளையிடும் அந்த கடைசி நிமிடம் வரையிலும் நான் முயற்சி செய்வேன். அவரே தலைவராக இருந்தார். அவரே தலைவராக இருக்கவேண்டும்” என்று கூறியிருக்கிறார்.