புதுடெல்லி: ரயில் இன்ஜின்களில் சிறுநீர் கழிப்பறைகள் பொருத்துவது குறித்து, அதன் ஓட்டுநர்களிடம் ரயில்வே வாரியம் கருத்து கேட்டு வருகிறது. இந்திய ரயில்வேயில் மொத்தம் 14 ஆயிரம் டீசல் – எலக்ட்ரிக் இன்ஜின்கள் உள்ளன. இதில், 1,000 பெண்கள் உள்பட 60 ஆயிரம் பேர் ஓட்டுநர்களாக பணியாற்றுகின்றனர். நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் இன்ஜின்களில் கழிப்பறைகள் இல்லாத காரணத்தால் ஓட்டுநர்கள் இயற்கை உபாதையை கழிப்பதில் பெரும் சிரமம் அடைகின்றனர். ஐக்கிய முன்னணி கூட்டணி ஆட்சியின்போது சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சராக இருந்த போது நடத்திய ஆய்வின் அடிப்படையில், 97 இன்ஜின்களில் பயோ-டாய்லெட் பொருத்தப்பட்டது.
இந்நிலையில், ரயில்வேயில் மொத்தமுள்ள 17 மண்டலங்களில் உள்ள ஓட்டுநர்களிடம் இன்ஜினில் சிறுநீர் கழிப்பறை பொருத்துவது குறித்து, அவர்களின் மொபைல் மூலமாக கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதில், பெரும்பாலானவர்கள் இன்ஜினில் கழிப்பறை இருக்க வேண்டும். சிறுநீர் கழிப்பறை மட்டும் போதாது என தெரிவித்தனர். குறிப்பாக, பெண்கள் ஓட்டுநர்களாக பணியாற்றும் பட்சத்தில், சிறுநீர் கழிப்பறைகளை அவர்களால் பயன்படுத்த முடியாது. அதனால், பொதுவான டாய்லெட் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, விரிவான கருத்து பரிமாற்றத்துக்கு பிறகு கழிப்பறை அல்லது சிறுநீர் கழிப்பறை அமைப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.