செங்கல்பட்டு: சென்னை, கோவிலம்பாக்கம் அருகே 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது.
சென்னை, கோவிலம்பாக்கத்தை அடுத்த சுண்ணாம்பு கொளத்தூரைச் சேர்ந்தவர் பிரசாந்த் (32). கடந்த 2017-ம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அவரைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து பிரசாந்த்தை கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக செங்கல்பட்டு சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வழக்கு விசாரணை நிறைவடைந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், பிரசாந்த்துக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனை உட்பட 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 8 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.41 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.