ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை நாளை முதல்வரிடம் சமர்ப்பிப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் நாளை காலை 10.30 மணிக்கு தனது அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா தோழி சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என 157 பேரிடம் விசாரணை நடத்தியது. இந்த ஆணையத்தின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது.

இதைத் தொடர்ந்து இறுதி அறிக்கை தயார் செய்யும் பணியில் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக் குழு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை ஆவணங்களை ஆய்வு செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை மற்றும் ஆணைம் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் கடந்த 2017 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டு 5 ஆண்டுகள் விசாரணைக்கு பின் அறிக்கையை தாக்கல் செய்கிறது.

சுமார் 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை நாளை காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆறுமுகசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்குகிறார். ஜெயலலிதா உடன் இருந்தவர்கள், உறவினர்கள், அதிகாரிகள் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில் 14 முறை ஆணையத்திற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.