ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் கடந்த 5 நாட்களில் 13 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நேற்று காலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. தோடா மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதலில் ஏற்பட்ட நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோளில் 2.9 புள்ளிகளாக பதிவானது. இதனை தொடர்ந்து, நான்கரை மணி நேரம் கழித்து மீண்டும் மக்கள் நிலஅதிர்வை உணர்ந்தனர். இது 3.4 புள்ளிகளாக பதிவானது. ஜம்முவின் தோடா, காத்ரா மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் கடந்த 5 நாட்களில் அடுத்தடுத்து 13 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் இரவில் கூட நிம்மதியாக தூங்க முடியாமல் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்த தகவல் இல்லை.
