மிஸ் இங்கிலாந்து போட்டியில் முதல் முறையாக ஒப்பனை இல்லாமல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய அழகி..!

லண்டன்,

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ‘மிஸ் இங்கிலாந்து 2022’ அழகிப் போட்டியில், லண்டன் நகரத்தைச் சேர்ந்த 20 வயது மெலிசா ராவ்ஃப், இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கல்லூரியில் அரசியல் படித்து வரும் மாணவியான இவர், ஒப்பனை எதுவும் இல்லாமலேயே மிஸ் இங்கிலாந்து அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று வரை முன்னேறியுள்ளார்.

மிஸ் இங்கிலாந்து போட்டியின் 94 வருட வரலாற்றில், அழகி ஒருவர் முதல் முறையாக ஒப்பனை இல்லாமல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனது இயற்கையான உள்ளார்ந்த அழகை வெளிப்படுத்தவும், சமூக வலைதளங்களில் அழகு குறித்து சொல்லப்படும் நிர்ணயங்களை மாற்றவும் ஒப்பனை இல்லாமல் போட்டியில் பங்கேற்றதாக மெலிசா ராவ்ஃப் கூறியுள்ளார்.

பல பெண்கள் தங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், சமூக அழுத்தம் காரணமாக ஒப்பனை செய்து கொள்வதாகவும், நமது இயற்கையான தோல் நமக்கு பிடித்திருந்தால் அதை ஒப்பனை என்ற பெயரில் பிறருக்காக மூடி மறைக்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தங்கள் மீதான தன்னம்பிக்கையை வளரச் செய்ததற்காக பல இளம் பெண்கள் தனக்கு நன்றி தெரிவித்து வருவதாக கூறியுள்ள மெலிசா, அழகு பற்றி அனைத்து படிநிலைகளையும் தான் உடைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். மிஸ் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் மெலிசா ராவ்ஃப் வெற்றி பெற வேண்டும் என அவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.