திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் 9-வது மாநில மாநாடு கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. மாநாட்டின் நிறைவு நாளான நேற்று சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில், அகில இந்திய விவசாயிகள் சங்க இணைச் செயலாளர் பிஜூ கிருஷ்ணன் பேசியதாவது: பாஜக ஆட்சி விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் வலிமையான போராட்டத்தால்தான், 3 வேளாண் சட்டங்களை கைவிட்டது. விவசாயத்தை லாபகர தொழிலாக மாற்றுவதன் மூலம், அதிலிருந்து சிறு, குறு விவசாயிகள் வெளியேறும் கட்டாயத்தை உருவாக்குகின்றனர். பாஜக ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை வெகுவாக உயர்ந்திருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆனால், அதைப்பற்றி பாஜக கவலைப்படவில்லை. மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்தும் செயலில் தொடர்ந்து பாஜக ஈடுபடுகிறது. விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் சாதி, மதமில்லை. எங்கள் உரிமைகளுக்காக எப்போதும் ஒன்றிணைந்து போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
