நொய்டா: நொய்டா இரட்டை கோபுர கட்டடம் தகர்ப்பை பார்த்தவர்கள் கைத்தட்டி ரசித்துக்கொண்டிருக்க, வெடிபொருட்களை வெடிக்கச்செய்யும் பட்டனை அழுத்தியவர் கண்ணீர் விட்டதாக கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் நொய்டாவில், ‘சூப்பர்டெக்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம்சார்பில், ‘சூப்பர் டெக் எமரால்ஸ்ட் கோர்ட்’ என்ற குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகத்தில், ‘அபெக்ஸ்’ என பெயரிடப்பட்ட, 334 அடி உயரமுள்ள, 32 மாடிகள் உடைய கட்டடமும், ‘சியேன்’ என பெயரிடப்பட்ட, 318 அடி உயரமுள்ள, 29 மாடிகள் உடைய கட்டடமும், முறையான அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இந்தக் கட்டடங்களில், 21 கடைகளும், 915 குடியிருப்புகளும் கட்டப்பட்டிருந்தன.
இது தொடர்பாக அந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ளோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த இரண்டு கட்டடங்களையும் இடிக்கும்படி கடந்தாண்டு ஆகஸ்டில் தீர்ப்பு அளித்தது. அதன்படி, இந்தக் கட்டடங்களை இடிக்கும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படும் ‘எடிபைஸ் இன்ஜினியரிங்’ என்ற நிறுவனம், தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த, ‘ஜெட் டெமாலிஷன்’ நிறுவனத்தின் உதவியுடன் வெடிவைத்து தகர்க்கும் பணியில் ஈடுபட்டது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் 3,700 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தி வெறும் 9 நொடிகளில் கட்டடம் தகர்க்கப்பட்டது.

சீட்டுக்கட்டு போல் சரியும் காட்சிகளை பலரும் ரசித்து பார்த்தனர். இது ஒருபுறம் இருக்க, வெடிபொருட்களை வெடிக்கச்செய்யும் பட்டனை அழுத்தியவரோ கட்டடம் இடிந்தது குறித்து கண்ணீர் விட்டு அழுததாக கூறியுள்ளார். பட்டன் அழுத்திய சேட்டன் தத்தா கூறுகையில், ‘வெடிக்கச் செய்யும்போது கட்டடத்தில் இருந்து நான் 70 மீட்டர் தொலைவில் இருந்தேன். கட்டடம் இடிப்பு 100 சதவீதம் வெற்றியடைந்தது. வெடிப்புக்கு பிறகு, நானும் எனது குழுவினரும் அந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். சில நிமிடங்களுக்குப் பிறகு, அதை பார்த்து கண்ணீர் விட்டு அழுதோம்’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement