புதுக்கோட்டை: “மக்கள் கடுமையான வறுமையிலும், துன்பத்திலும், துயரத்திலும் இருக்கிறார்கள். அம்மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இலவச திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை அலட்சியப்படுத்துவதும், கொச்சைப்படுத்துவதும் கடும் கண்டனத்துக்குரியது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” தமிழக முதல்வர் தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தில், மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
சாதாரண ஏழை, எளிய மக்களால் பெற முடியாத உதவிகளை மாநில அரசுகள் ஆங்காங்கே செய்து கொண்டிருக்கின்றன. அதனை இலவசம் என்று கொச்சைப்படுத்துவது மிகமிக தவறானது. இந்த இலவசங்கள் என்று குறிப்பிடுகிற எந்த பொருளாக இருந்தாலும் சரி, அதைக்கூட வாங்க முடியாத அளவுக்கு மக்களின் வாழ்க்கைத்தரம் இருக்கிறது.
இந்த வாழ்க்கைத்தரம் இப்படி சீரழிந்ததற்கு காரணமே மோடி சர்க்கார்தான் முழு முக்கியமான காரணம். மக்கள் கடுமையான வறுமையிலும், துன்பத்திலும், துயரத்திலும் இருக்கிறார்கள். அம்மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை அலட்சியப்படுத்துவதும், கொச்சைப்படுத்துவதும் கடும் கண்டனத்துக்குரியது” என்று அவர் கூறினார்.