ஆக்கிரமிப்பால் குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர்

வேலூர்

குடியாத்தம் நகராட்சி 2-வது வார்டு சித்தூர் கேட் 4-வது புதுஆலியார் தெருவில் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்பதாகவும், மழைக் காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் குடியிருப்புகளை சுற்றி தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் தொடர்ந்து புகார் அளித்தனர்.

அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லை என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் புது ஆலியார்தெரு பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கால்வாய்கள் கட்டித்தர வேண்டும் எனவும், வேறு இடங்களில் இருந்து இந்தப்பகுதிக்கு கழிவுநீர் வருவதை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்டு சர்வே செய்து ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். ஆய்வின்போது நகர மன்ற உறுப்பினர்கள் அன்வர்பாஷா, ம.மனோஜ், என்.கோவிந்தராஜ், ஏ.தண்டபாணி, சீஊர் ஊராட்சி மன்ற தலைவர் உமாபதி, துணைத்தலைவர் அஸ்ஜீ உள்பட பலர் உடன் இருந்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.