சென்னை: வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து துறை செயலர் இரா.ஆனந்தகுமார் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்.21-ல் நடந்த மாற்றுத் திறனாளிகள் துறை மானிய கோரிக்கையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘கிராமங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் வீடு வழங்க கோரியும், நகரங்களில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு வழங்கக் கோரியும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்’’ என்று தெரிவித்தி ருந்தார்.
இதை நிறைவேற்றும் வகையில், மாற்றுத் திறனாளிகள் நலஇயக்குநர், அரசுக்கு எழுதிய கடிதத்தில், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகள் வாழ்வாதாரத்துக்கு அடிப்படைத் தேவையான வசிக்க வீடு அமைத்துக் கொள்ளும் பொருட்டு கிராமங்கள், நகர்ப்புறங்களில் வசித்து வரும் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் மருத்துவச் சான்று மற்றும் தனித்துவம் வாய்ந்தஅடையாள அட்டை பெற்றிருப்பதை கட்டாயமாக்கி, எவ்வித நிபந்தனையும் இன்றி மாற்றுத் திறனாளிகளை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடுவழங்க உரிய நடவடிக்கை மேற் கொள்ளலாம் என அரசுக்கு தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரின் கருத்துருவை கவனமாக பரிசீலித்து கீழ்க்காணும் உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
5 சதவீதம் ஒதுக்கீடு
கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு வழங்கும் திட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு விதிகளுக்கு உட்பட்டு மொத்த ஒதுக்கீட்டில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான வீடு ஒதுக்கீட்டில் போதுமான மாற்றுத் திறனாளிகள் இல்லாத பட்சத்தில் அவ்வீட்டை இதர விண்ணப்பதாரர்களுக்கு வழங்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகள், அவர்கள் எளிதில் அணுகும் வகையில் தங்கு தடையற்ற சூழல் ஏற்படுத்தித் தரவேண்டும்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தரைதள குடியிருப்புகள் ஒதுக்கப்பட வேண்டும். இதுதொடர்பான கண்காணிப்பு பணியை மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு வழங்கும் திட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.