வாஷிங்டன்,
அமெரிக்காவின் மிஸ்ஸிப்பி மாகாணம் டுபேலா நகரில் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த வால்மார்ட் அங்காடியை விமானம் மூலம் தகர்க்கப்போவதாக விமானி ஒருவர் விடுத்த மிரட்டல் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மிரட்டல் விடுத்தபடி விமானத்தில் சுமார் 3 மணி நேரம் 29-வயதான விமானி சுற்றி வந்தார். இந்த நபருடன் டுபேலா நகர போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஒருபக்கம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வால்மார்ட் அங்காடியில் இருந்து வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். நிலைமை சீராகும் வரை வால்மார்ட் அங்காடியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், எரிபொருள் தீர்ந்ததால் விமானத்தை ஆபத்தான முறையில் விமானி தரையிறக்கினார். அவரை உடனடியாக பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், மிரட்டல் விடுத்த நபரை பற்றிய விவரம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. 9 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானத்தை திருடிய விமானி, மிரட்டல் விடுத்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.