மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு தடை விதிக்க கோரிய மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை மூன்று வாரம் ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பொட்டிபுரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மதிமுக பொது செயலாளார் வைகோ உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பொட்டிபுரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சுமார் 1,000 மீட்டர் ஆழத்துக்கு சுரங்கப்பாதை அமைத்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மலைப்பகுதி கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மதிகெட்டான்சோலை தேசியப் பூங்கா முதல் பெரியாறு வரையிலான புலிகள் வழித்தடத்தில் அமைந்துள்ளது. இதனால் சுற்று சூழலுக்கும், வன உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
எனவே, தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பொட்டிபுரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். என்று கோரியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு நீதிமன்றத்தில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை அடுத்து, இந்த வழக்கு விசாரணையை 3 வாரம் ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.