புதுடெல்லி: தனக்கு பிரதமராகும் ஆசை இல்லை என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் தெரிவித்துள்ளார். அவர் திங்கள்கிழமை காங்கிரஸ் முக்கியத் தலைவரான ராகுல் காந்தியை சந்தித்தப் பின்னர் இதனைத் தெரிவித்தார்.
பிஹாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸுடன் இணைந்து புதிதாக ஆட்சி அமைத்துள்ளார். மேலும், வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளார். இதற்காக டெல்லி வந்துள்ள நிதிஷ் குமார் திங்கள்கிழமை மாலையில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலையில் எதிர்கட்சிகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதம் நடத்தியதாக தெரிகிறது.
சந்திப்புக்கு பின்னர் நிதிஷ் குமார் கூறும்போது, “மாநிலக் கட்சிகளை பலவீனப்படுத்தும் ஒரு கூட்டு முயற்சி நடந்து வருகிறது. என்னுடைய முயற்சி எல்லாம் நாட்டின் பொதுத் தேர்தலுக்கு முன்பு எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பதேயாகும். என்னை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் எண்ணம் எனக்கு இல்லை” என்றார்.
முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால், ஜேஎஸ்டி கட்சித் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி உள்ளிட்ட பல்வேறு முக்கிய எதிர்கட்சித் தலைவர்களை சந்திப்பதற்காக அவர் மூன்று நாள் பயணமாக நிதிஷ் குமார் டெல்லி வந்தார். அத்துடன், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இடதுசாரித் தலைவர்களையும் நிதிஷ் குமார் சந்திக்க இருக்கிறார். அவருடன், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் லல்லன் சிங், பிஹார் அமைச்சர்கள் சஞ்சை ஷா மற்றும் அசோக் சவுத்திரி ஆகியோர் உடன் இருக்கின்றனர்.
மேலும், வலுவான எதிர்கட்சிகளின் கூட்டணியினை உருவாக்குவதற்காக நிதிஷ் குமார், மஹாராஷ்டிரா, ஹரியாணா, கர்நாடகாவிற்கும் செல்ல திட்டமிட்டு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.