பிரம்மாஸ்திரா புரமோஷன் நிகழ்ச்சியில் அசத்த நினைத்த ராஜமவுலி : தகர்ந்த கனவு

பாலிவுட்டில் ரன்பீர் கபூர், அமிதாப்பச்சன், நாகார்ஜுனா மற்றும் ஆலியா பட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வரும் செப்டம்பர் 9ம் தேதி வெளியாக இருக்கும் படம் பிரம்மாஸ்திரா. ஹிந்தியில் உருவாகியுள்ள இந்தப்படம் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பிரம்மாஸ்திரா படக்குழுவினர் புரோமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அப்படி சமீபத்தில் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஒரு நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பை மட்டும் நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர் இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமவுலி பேசும்போது, இந்த புரோமோஷன் நிகழ்ச்சியை ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகளை செய்திருந்தோம்.. இதற்காக 5 நாட்கள் முன்னதாகவே காவல்துறையில் அனுமதியும் பெற்று இருந்தோம். ஆனால் அவர்கள் கடைசி நேரத்தில் விநாயகர் சதுர்த்தி பணிகள் இருப்பதால் பாதுகாப்பு வழங்க முடியாது எனக்கூறி அனுமதியை ரத்து செய்துவிட்டனர். தயாரிப்பாளர் கரண் ஜோஹர் விநாயகர் சதுர்த்தி சமயத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து ஒரு தவறான முடிவை எடுத்துவிட்டார் என்று தான் நினைக்கிறேன்.

படத்தின் டிரைலரில் நாயகன் ரன்பீர் கபூர் தனது சக்தியை பயன்படுத்தி தீயை ஆகாயத்தை நோக்கி வீசுவதை பார்த்திருப்பீர்கள். அந்த காட்சியை இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் நிஜமாகவே செய்து காட்ட ஏற்பாடு செய்திருந்தேன். ரன்பீர் கபூர் அப்படி தீயை ஆகாயத்தை நோக்கி வீசும்போது அந்த சமயத்தில் பலவிதமான வானவெடிகள் வானத்தை நோக்கிப் பார்ப்பது போல ஏற்பாடுகள் செய்து இருந்தேன்.

அதற்கடுத்து அவர் ஜூனியர் என்டிஆரை பார்த்து இப்போது நீ செய் என்று கூறுவார். ஜூனியர் என்டிஆரும் அதுபோன்று செய்யும்போது அதேபோல வானவேடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தேன். இந்த நிகழ்வுகளை பார்வையாளர்களுக்கு மத்தியில் அமர்ந்து நானும் ஒரு பார்வையாளனாக பார்த்து ரசிக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் போலீஸார் அனுமதி மறுத்ததால் என்னுடைய இந்த கனவு தகர்ந்து விட்டது. ஆனால் இது தற்காலிகம் தான். படத்தின் சக்சஸ் மீட்டை அதே இடத்தில் நடத்தி இதே விஷயங்களை அப்போது செய்யத்தான் போகிறேன்” என்று மன வருத்தத்துடன் கூறியுள்ளார் ராஜமவுலி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.